Lok Sabha Election 2024 vs CAA: குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) தொடர்பாக கடுமையான போர் நடந்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள், 3 மாதம் அமைதியாக இருந்துவிட்டு, தற்போது அமல்படுத்துவதன் நோக்கம் என்ன? 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தங்கள் தேர்தல் லாபத்திற்காக குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி உள்ளனர் என்று எதிர்க்கட்சிகள் பாஜகவை குறிவைத்து வருகின்றன.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு
குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக பாஜக அல்லாத அனைத்து மாநில அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகிறது. மேலும் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா ஆகிய மூன்று மாநில அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளன.
இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு, அரசியல் தலைவர்கள் என்ன கூறினார்கள் என்று பார்ப்போம்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது,
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து, "இது என்ன சிஏஏ? சிஏஏ என்றால் என்ன? இதில் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும். சிறுபான்மையினரைச் சேர்ந்த ஏராளமானோர் நமது நாட்டிற்குள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களுக்கு வேலை வழங்கப்படும், அவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்.
ஆனால் பாஜக நமது பிள்ளைகளுக்கு வேலை வழங்க முடியாது. ஆனால் பாகிஸ்தானில் இருந்து வரும் பிள்ளைகளுக்கு வேலை கொடுக்க நினைக்கிறார்கள். அதாவது நமது பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய வேலைகளை, அவர்களுக்கு கொடுக்க விரும்புகிறார்கள். பாகிஸ்தானில் இருந்து இங்கே வருபவர்களுக்கு பாஜக வீடுகளை கட்டித்தரும். ஆனால் நமது பிள்ளைகளுக்கு உரிமையான வீடுகளில் அவர்களை குடியேற்ற வேண்டும் என பாஜக நினைக்கிறது. வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 2.5 கோடி முதல் 3 கோடி சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்படும். நமது குடும்பங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டிய நமது பணம் பாகிஸ்தானில் இருந்து வந்து குடியேறியவர்களுக்கு பயன்படுத்தப்படும்.
எனவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், மக்கள் பா.ஜனதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மம்தா பானர்ஜி கூறியது,
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் நல்லவை இருந்தால் அதை ஆதரிப்போம். கெட்டவை இருந்தால் கண்டிப்பாக அதை திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கும். இது உரிமைகளைப் பறிக்கும் செயல் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து சித்தராமையா கூறியது,
மத அடிப்படையிலான குடியுரிமையை நாங்கள் எதிர்க்கிறோம் லோக்சபா தேர்தலை மனதில் வைத்து பாஜக கொண்டு வந்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அசாதுதீன் ஒவைசி கூறியது,
நீங்கள் ஒவ்வொரு மதத்திற்கும் அனுமதி (குடியுரிமை) வழங்குகிறீர்கள். ஆனால் இஸ்லாம் மதத்தை சேர்தவர்களுக்கு நீங்கள் குடியுரிமை வழங்கவில்லை. இது சமத்துவ உரிமைக்கு எதிரானது என ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறியது,
சிஏஏ சட்டம் தார்மீக ரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும் தவறானது என்று கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மெகபூபா முப்தி கூறியது,
மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடித்தால், சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தும் சிஏஏவை அமல்படுத்துவது மோடி அரசின் தோல்விகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கமல்ஹாசன் கூறியது,
மக்களவைத் தேர்தலுக்கு முன் சிஏஏ சட்டத்தை அமல்படுத்தி அதன்மூலம் மக்களை பிளவுபடுத்த மத்திய அரசு முயற்சிப்பதாக நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து நடிகர் விஜய் கூறியது,
சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூறியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் கூறியது,
தமிழ்நாட்டில் சிஏஏ சட்டம் எக்காரணம் கொண்டு அமல்படுத்தப்படாது என்று திமுக அரசு மக்களுக்கு உறுதியளித்து உள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது X தளத்தில், "குடியுரிமை திருத்தச் சட்டம் சட்டவரைவாக இருந்த நிலையிலேயே எதிர்த்தோம், நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தோம்..
இது சட்டமானதும் #SignatureAgainstCAA இயக்கம் நடத்தினோம், பேரணி நடத்தினோம்; போராடினோம்! ஆட்சிக்கு வந்ததும் #CAA-வைத் திரும்பப் பெறச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்! நடைமுறைப்படுத்தப் போவதாக ஒன்றிய அமைச்சர் பேசியபோது, “தமிழ்நாட்டில் CAA கால்வைக்க விடமாட்டோம்” என உறுதிபட அறிவித்தேன்.
நேற்று #CitizenshipAmendmentRules2024 அறிவிக்கை வெளியாகியுள்ள நிலையில் மீண்டும் ஒருமுறை உரத்துச் சொல்கிறேன்: தி.மு.க அரசு தமிழ்நாட்டில் #CAA நடைமுறைப்படுத்தப்படுவதை நிச்சயம் அனுமதிக்காது! எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க - CAA சட்டத்திற்கு அதிமுக ஏன் ஆதரவு கொடுத்தது? எம்எல்ஏ ராஜன் செல்லப்பா விளக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ