உயிரினங்களிலேயே பசுமாடு ஒன்று தான் சுவாசித்தலின் போது ஆக்சிஜனை உட்கிரகித்து அதனையே திரும்ப வெளியிடுவதாக திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில பாஜக முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் பேசுகையில்; பசு மாடுகள் குணப்படுத்தும் தன்மையைக் கொண்டிருப்பதாகக் கூறினார். மேலும், பசுமாடுகளை தடவிக் கொடுப்பதன் மூலம் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் குணமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


பசும்பால் மற்றும் பசுவின் கோமியம் ஆகியவற்றின் மருத்துவப் பயன்கள் குறித்து புகழ்ந்து பேசினார். அவரது இந்தப் பேச்சின் வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதிலும், முக்கியமாக பசுமாடு சுவாசிக்கும் போது ஆக்சிஜனை வெளியே விடுவதாக கூறிய அவரது கருத்து சர்ச்சையை எழுப்பியுள்ளது. மேலும் பசுமாடு இருக்கும் இடத்திற்கு சமீபத்தில் வசிப்பவர்களுக்கு காசநோய் உள்ளிட்ட (tuberculosis) நோய்கள் இருந்தாலும் குணமாகிவிடும் எனவும் திரிவேந்திர சிங் ராவத் புதிய தகவலையும் தெரிவித்துள்ளார்.


உலகிலேயே தாவரங்கள் மட்டுமே ஆக்சிஜனை வெளியிடும். கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு ஆக்சிஜனை தாவரங்கள் வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, அந்த மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவரான அஜய் பட், சமீபத்தில் அங்கு பாய்கிற கருட கங்கா ஆற்றுத்தண்ணீரை கர்ப்பிணிப் பெண்கள் குடித்தால் சிசேரியன் பிரசவத்தை தவிர்க்கலாம்; சுகப்பிரசவம் ஆகும் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில் இப்போது திரிவேந்திர சிங் ராவத்தின் பேச்சும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.