எதிர்க்கட்சிகள் தங்கள் எண்ணிக்கை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை, அவர்களது ஒவ்வொரு கருத்தும் மதிப்புடையது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அபார வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30-ஆம் தேதி பதவி ஏற்றது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் 31-ஆம் தேதி கூடிய மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17-ஆம் தேதி கூட்ட முடிவு எடுக்கப்பட்டது. 


அதன்படி இன்று 17-வது நாடாளுமன்ற மக்களவை முதல் முறையாக கூடியது.  இதையொட்டி 2–வது முறையாக பிரதமர் பதவி ஏற்றுள்ள நரேந்திர மோடி மக்களவைக்கு வந்தடைந்தார்.


கூட்டம் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் கூடியிருந்த செய்தியாளர்களுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார். பிரதமர் மோடி பேசுகையில், முதல் முறை நடைபெற்ற எங்களது அரசு ‘அனைவருக்காகவும், அனைத்து மக்களின் வளர்ச்சிக்காகவும்’ என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டது. அதனால் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து 2–வது முறையாக எங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.


பல ஆண்டுகளுக்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் ஒரு அரசு மீண்டும் ஆட்சி அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


சுதந்திரத்திற்கு பின்னர் மக்களவையில் அதிக பெண் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுபோல பலவகைகளில் இந்த புதிய மக்களவை வரலாற்று சாதனை படைத்துள்ளது. மக்களவை கூட்டத்துக்கு நாம் வரும்போது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பதை மறந்துவிட வேண்டும். 


நாம் நமது பிரச்சினைகளை நடுநிலையுடன் சிந்தித்து தேசத்தின் நலனுக்காக உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


தொடர்ந்து பேசிய அவர் தீவிரமாக செயல்படும் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு கூடுதல் பலமாக அமையும். எதிர்க்கட்சிகள் தங்கள்  எண்ணிக்கை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, அவர்கள் பிரச்சினைகள் பற்றி தீவிரமாக பேசுவார்கள், அவை நடவடிக்கைகளில் தவறாமல் பங்கேற்பார்கள் என நான் நம்புகிறேன். அவர்களது ஒவ்வொரு கருத்தும், ஒவ்வொரு உணர்வும் எங்களுக்கு மதிப்பு உடையது என தெரிவித்துள்ளார்.