சர்வதேச அரங்கில் இந்தியா வலிமை அடைந்து வருவதை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில் இன்று  உத்தர பிரதேச மாநிலம் பாதோஹி நகரில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்.


பிரச்சாரத்தின் போது அவர் சர்வதேச அரங்கில் இந்தியா வலிமை அடைந்து வருவதை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் நம் நாடு நான்கு வகையான அரசாங்கத்தை பார்த்துள்ளது எனவும், அவை குடும்ப அரசு, இடதுசாரி அரசு, பணம், அதிகாரத்தால் நடைபெற்ற அரசு மற்றும் நாட்டு மக்களின் நலன் குறித்து அக்கறை கொண்ட அரசு என பட்டியலிட்டார். இதில் தற்போது நடைப்பெற்று வருவது மக்களின் மீது அக்கறை கொண்ட அரசு எனவும் பெருமிதம் தெரிவித்தார்.


காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு நாட்டின் நலனை விட தங்கள் குடும்பத்தாரின் நலன் மீதும் கட்சி தலைவர்கள் நலன் மீதும் தான் அக்கறை அதிகம் என தெரிவித்த அவர்,  சர்வதேச அரங்கில் இந்தியா வலிமையடைந்து வருவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என குற்றம்சாட்டினார்.


கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்த போது நாட்டில் ஊழல் அதிகரித்தது. முக்கிய தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவானது. ஆனால் தான் முதல்வராக இருந்த நீண்ட காலக்கட்டத்திலும் பிரதமராகவும் இருந்த காலக்கட்டத்திலும் தன் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட பதிவாகவில்லை எனவும் குறிப்பிட்டு பேசினார்.


தேர்தல் நேரத்தின் போது மசூத் அசாரை ஐநா சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்ததற்கு பாஜக தான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுக்கின்றன. எல்லாவற்றையும் தேர்தல் கண்ணோட்டத்தில் பார்ப்பதே எதிர்க்கட்சிகளின் வாடிக்கையாகி விட்டது எனவும் தெரிவித்தார்.


காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சிகள் மக்களை சாதி, மதம் அடிப்படையில் பிரித்தாள நினைக்கின்றன என தெரிவித்த அவர்.,  தங்கள் மக்களுக்கு கழிப்பறை கூட கட்டி தர முடியாதவர்கள் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மூலம் தங்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் பல கோடி லாபம் பார்க்க வழிவகை செய்தவர்கள் நாட்டை எப்படி காப்பாற்ற போகிறார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.


தொடர்ந்து முத்தலாக் சட்டம் குறித்து பேசிய மோடி "உலகின் பல இஸ்லாமிய நாடுகளில் உடனடி முத்தலாக் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே உரிமையை நம் நாட்டில் உள்ள முஸ்லிம் சகோதரிகளுக்கும் வழங்க விரும்புகிறோம்". எந்த மதத்தையும் அவமரியாதை செய்யும் நோக்கில் தங்களது ஆட்சி செயல்படவில்லை எனவும் தெரிவித்தார்.