விமர்சிக்க வார்த்தைகள் தேவையில்லை, உங்கள் பெயரே போதும் : மத்திய அரசை சாடிய எதிர்க்கட்சிகள்
Un parliamentary words : நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் குறித்த புதிய உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில் ஆங்கில வார்த்தைகளும், இந்தி வார்த்தைகளும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.
வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு, கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன.
முதலை கண்ணீர், அவமானம், கழுதை, கண்துடைப்பு, ரவுடித்தனம், போலித்தனம், தவறாக வழிநடத்துதல், பொய், உண்மையல்ல ஆகிய வார்த்தைகளும் இனிமேல் தடை செய்யப்படுகின்றன. இந்த வார்த்தைகளைப் பேசினால் அது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் இடையே கடும் விமர்சனம் எழுந்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், புதிய இந்தியாவிற்கான புதிய அகராதி எனக் குறிப்பிட்டு, அன்பார்லிமெண்டரி என்ற வார்த்தைக்கான அர்த்தத்தைக் கொடுத்துள்ளார். அன்பார்லிமெண்டரி என்பது விவாதத்தின்போது, ஒரு நாட்டை பிரதமர் எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதை குறிப்பிடக்கூடிய வார்த்தை. அந்த வார்த்தைக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அன்பார்லிமெண்டரி வார்த்தைக்கான உதாரண வாக்கியம் என, தனது பொய்களும், தோல்வியும் வெளிச்சத்துக்கு வரும்போது இரட்டை நிலைப்பாடு கொண்ட சர்வாதிகாரி ஒருவர் வடிக்கும் முதலைக்கண்ணீர் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வாக்கியத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ள பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரைன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தான் இந்த அனைத்து வார்த்தைகளையும் நிச்சயம் பயன்படுத்தப்போவதாகவும், முடிந்தால் தன்னை சஸ்பெண்ட் செய்யவும் எனவும் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மத்திய அரசை விமர்சிக்க எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும் அனைத்து வார்த்தைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சங்கி என்ற வார்த்தைக்கு மட்டும் தான் இன்னும் தான் தடை விதிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
தற்போது தடை செய்யப்பட்டுள்ள சொற்கள் இல்லாமல் சட்டங்களே இயற்ற முடியாது எனவும், சொற்களைக் கண்டு மக்கள் விரோத அரசுகள் அஞ்சுவது ஒன்றும் புதிதல்ல எனவும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார். இந்த சொற்கள் இல்லாமல் போனால் யாரும் கவலைப்பட போவதில்லை, உங்கள் பெயர்களே போதுமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ