ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் கடைசி நாள் 28-ம் தேதி. 


இந்த தேர்தலில் மத்தியில் ஆளும்கூட்டணி சார்பில் தலித் இனத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாஜக வேண்டுகோள் விடுத்தது. இதனை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்துவிட்டன. 


இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மீரா குமார் போட்டியிடுவார் என அறிவித்தார். மேலும் அவருக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்கும் என நம்புகிறேன் எனவும் தெரிவித்தார்.