3 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து ஜெட் ஏர்வேஸ் விமானிகள் 1100 பேர் திங்கட்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜெட் ஏர்வேஸில் 23 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சில ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிறுவனம் வாங்கிய கடன்களையும் அடைக்க முடியவில்லை. சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் உள்ளது. அந்த கடனையும் நிறுவனத்தால் அடைக்க முடியவில்லை.


கடும் நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பளமும் வழங்கவில்லை. மேலும் பல விமானங்களை இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகள் தங்கள் சம்பள பாக்கியை உடனே வழங்காவிட்டால் வருகிற விமானங்களை இயக்காமல் ஸ்டிரைக்கில் ஈடுபடபோவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில், 119 விமானங்களை வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ் பல விமானங்களை இயக்காமல் நிறுத்தி விட்டது. குறிப்பாக, 157 உயிர்களை பறித்த எத்தியோப்பியா விமான விபத்துக்கு பின்னர் போயிங் 737 மேக்ஸ்-8 ரகத்தை சேர்ந்த 12 விமானங்களை தரையிறக்கி நிரந்தரமாக நிறுத்தி விட்டது. மேலும், வேறுசில காரணங்களுக்காக மேலும் பல விமானச் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. 16 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.


போதிய பணப்புழக்கம் இல்லாததால் அந்நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. ஜெட் ஏர்வேஸ் விரைவில் சம்பள பாக்கியை வழங்காமல் போனால் ஏப்ரல் 15 ஆம் தேதியில் இருந்து விமானங்களை ஓட்டாமல் அந்நிறுவனத்தின் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று இந்திய விமானிகள் சங்கம் முன்னர் எச்சரித்திருந்தது.


இதை நினைவூட்டும் வகையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள், பணிப்பெண்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்குள் நேற்று அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தினர். 


இந்நிலையில், ஏற்கனவே அறிவித்திருந்தபடி நாளை காலை 10 மணி முதல் விமானங்களை இயக்காமல் 1100 விமானிகள் வேலைநிறுத்தம் மேகொள்ள இருப்பதாக தேசிய விமானிகள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.