டெல்லி சொகுசு ஓட்டல் தீவிபத்து: ஓட்டல் உரிமையாளர் கைது!
டெல்லியில் சொகுசு ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த வழக்கில், ஓட்டலின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
டெல்லியில் சொகுசு ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த வழக்கில், ஓட்டலின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த பிப்ரவரி 12ம் தேதி அர்பிட் பேலஸ் ஹோட்டலின் மேற்பகுதியில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி வந்தது. இதில் ஹோட்டலில் தங்கி இருந்த 17 பேர் உயிரிழந்தனர். 17 பேரில் இரண்டு பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.
இதன் பின்னர் நடைபெற்ற விசாரணையில், அந்த ஓட்டலில் உரிய அனுமதி இன்றி கூடுதல் தளங்கள் கட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி போலீசார் அர்பிட் பேலஸ் ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயல் என்பவரை தேடி வந்தனர். அவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், ராகேஷ் கோயல் கத்தார் நாட்டில் இருந்து விமானம் மூலம் டெல்லி வருவதாக போலீசாருக்கு நேற்றிரவு ரகசிய தகவல் வந்தது.
இதைதொடர்ந்து, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ராகேஷ் கோயலை கைது செய்தனர்.