குல்புஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இந்தியாவின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ICJ எனப்படும் சர்வதேச நீதிமன்றம் ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் வழங்கிய மரண தண்டனையை மறு பரீசிலனை செய்ய வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டது. மேலும் மரண தண்டனையை நிறைவேற்ற விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீடிக்கும் என்றும் தெரிவித்தது. இந்த தீர்ப்பு இந்தியாவிற்கு கிடைத்த வெற்றி எனவும், உண்மைக்கும், நீதிக்கும் கிடைத்த வெற்றி எனவும் இந்தியா வரவேற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் ஊடகங்கள் அதற்கு நேர்மாறாக செய்தி வெளியிட்டுள்ளன.


பாகிஸ்தான் பிரபல நாளேடுகளான 'Dawn' , 'Geo tv' , 'The Express Tribune' ஆகியவை குல்புஷன் ஜாதவை விடுவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டன. மேலும் ஜாதவை “சுய வாக்குமூலம் அளித்த இந்திய உளவாளி” என்று குறிப்பிட்டுள்ள அவர்கள் இந்தியாவின் மனு ரத்து செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியிட்டன.


அதுமட்டும் இன்றி பாகிஸ்தான் அரசு அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “பாகிஸ்தானுக்கு பெரிய வெற்றி. குல்புஷன் ஜாதவை விடுதலை செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் மனு தள்ளுபடி செய்தது ICJ சர்வதேச நீதிமன்றம் ” என்று குறிப்பிட்டிருந்தது. 



இதேபோல் பாகிஸ்தானின் பல்வேறு ஊடகங்களும் ஐசிஜேவின் தீர்ப்பு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு கிடைத்த வெற்றி என்று செய்திகள் வெளியிட்டன.