தென் இந்தியாவில் தாக்குதல் அபாயம்; தமிழகம் உட்பட 6 மாநிலத்துக்கு அலர்ட்!!
இந்தியாவின் தெற்குப் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளன.
புதுடெல்லி: இந்தியாவின் தெற்குப் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளன என்று இராணுவ தெற்கு கட்டளை ஜி.ஓ.சி-இன்-சி லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.கே. சைனி இன்று (திங்களன்று) தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், சர் கிரீக் ஒட்டிய கடல் பகுதியில் கேட்பாரற்று கிடந்த சில படகுகளை பாதுகாப்பு அமைப்புகள் மீட்டெடுத்துள்ளன. இந்தியாவில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளின் திட்டத்தை முறியடிப்பதில் பாதுகாப்பு படைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன எனவும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், இந்தியாவின் தெற்குப் பகுதி மற்றும் கடலூர மாநிலங்களில் பயங்கரவாத தாக்குதல் ஏற்படக்கூடும் என்று எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. சர் கிரீக் ஒட்டிய கடல் பகுதியில் கைப்பற்றப்பட்ட சில படகுகளை குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த படகு மூலம் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளனரா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளின் எந்தவொரு திட்டமும் முறியடிக்கப்படும் என்று லெப்டினென்ட் ஜெனரல் சைனி கூறினார்.
ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370வது பிரிவு நீக்கிய பின்னர், பாகிஸ்தான் (Pakistan) எல்லைகோடு அருகே போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி அளித்து வருகிறது.
பி.எஸ்.எஃப்-க்கு(BSF) கிடைத்த ரகசிய தகவலின் படி, ஜெய்ஷ்-இ-முகமது (Jaish A Mohammed) அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் கடல் வழியாக இந்தியாவைத் தாக்கும் திட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும், அதற்காக 50 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் அடங்கிய குழுவுக்கு பாகிஸ்தானில் சிறப்பு "ஆழ்கடல் டைவிங்" பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் புலனாய்வு விசாரணையில் தெரிய வந்துள்ளது என பி.எஸ்.எஃப் கூறியுள்ளது. மேலும் இந்த தகவலை இராணுவ தெற்கு கட்டளை ஜி.ஓ.சி-இன்-சி லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.கே. சைனிக்கு அனுப்பியுள்ளது.