பாலகோட் தாக்குதலுக்குப் பின்னர், வான்வெளி தடையை நீக்கியது பாகிஸ்தான்
வான் பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த அனைத்து விதமான தடையை நீக்கியது பாகிஸ்தான்.
இன்று (செவ்வாய்க்கிழமை) பாகிஸ்தான் சிவில் ஏவியேஷன் ஆணையம், அந்நாட்டின் வான்வெளியை அனைத்து பொதுமக்கள் போக்குவரத்திற்கும் திறக்குமாறு உத்தரவிட்டது. பிப்ரவரியில் நடத்தப்பட்ட பாலகோட் தாக்குதலுக்குப் பின்னர், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வானில் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏ.என்.ஐ, செய்தி நிறுவனம் தகவலின் படி, வான்வழியை திறந்து விடுவது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில், இரு நாடுகளுக்குமிடையே உடன்பாடு ஏற்பட்டதால், தனது வான்வழியை இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் திறந்துவிட்டுள்ளது. இந்த வான்வழி நள்ளிரவு 12.41 மணி அளவில் திறக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக நடைமுறைக்கு வந்தது.
பாகிஸ்தானிடம் விமான நிறுவனங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்த அனுமதிக்குமாறு முன்பு இந்தியா கோரியிருந்தது. ஆனால் இந்தியா தனது போர் விமானங்களை எல்லையில் இருந்து அகற்ற ஒப்புக் கொண்டால் மட்டுமே அவ்வாறு செய்வதாக பாகிஸ்தான் கூறியிருந்தது என பாகிஸ்தான் விமானச் செயலாளர் ஷாருக் நுஸ்ரத் உள்ளூர் ஊடகத்திடம் மேற்கோள் காட்டியுள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் அதிகமான இந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என நாடே கூறியது. இதனையடுத்து பாகிஸ்தான் நாட்டுக்குள் புகுந்தஇந்திய விமானப்படை பாலக்கோட் என்னும் இடத்தில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இந்த சம்பவத்திற்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி தனது வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்தது பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.