இந்தியை ஏற்காதார் இந்தியாவை ஏற்காதவர்கள் -பிப்லப் குமார்!
இந்தி மொழியை, தேசிய மொழியாக ஏற்காதவர்கள், இந்தியாவை விரும்பாதவர்கள் என திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் கூறியுள்ளார்.
இந்தி மொழியை, தேசிய மொழியாக ஏற்காதவர்கள், இந்தியாவை விரும்பாதவர்கள் என திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்., இந்தியை தேசிய மொழியாக ஏற்காதவர்கள் தேசத்தை விரும்பாதவர்கள். நாட்டின் பெரும்பாலான மக்கள், இந்தி பேசுவதால், அந்த மொழியை தேசிய மொழியாக அறிவிப்பதை வரவேற்கிறேன். 200 ஆண்டுகள் இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யாவிட்டால், ஆங்கிலம் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருந்திருக்காது. காலனி ஆட்சிக்கு விஸ்வாசமாக இருந்த காரணத்தினால் தான், சிலருக்கு ஆங்கிலம் தகுதி சின்னமாக மாறி உள்ளது.
ஆங்கிலம் பேசும் நாடுகள் மட்டும் வளரவில்லை. ஜெர்மனி, ஜப்பான், ரஷ்யா, இஸ்ரேல் போன்ற நாடுகள் வளரவில்லையா? ஆங்கிலம் தெரியாமல், வங்காளம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் பேசும் மக்கள், அரசின் உதவியை எதிர்பார்க்கும் போது, அதிகாரிகள் மெதுவாக உதவுகின்றனர். ஆங்கிலத்தில் கேட்கும் போது உடனடியாக செய்கின்றனர். இவ்வாறு நடக்கக் கூடாது என பிப்லப் குமார் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர், தேசிய மொழியாக இந்தியை அறிவிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இதற்கு, தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தற்போது திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் தெரிவித்துள்ள கருத்து மீண்டும் எதிர்வலைகளை தூண்டியுள்ளது.