நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பெட்ரோல், டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று உயர்த்தியுள்ளன. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.03-ம் உயர்ந்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரங்களுக்கேற்ப பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மாதத்துக்கு இரு முறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.
இதனால் நேற்று புதிய விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் சர்வதேச உற்பத்தி விலையின் அளவும், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் விலையும் கணிசமாக உயர்ந்து வருவதையொட்டி இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் புதிய விலை உயர்வானது ஞாயிற்றுக்கிழமை(நேற்று) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 42 பைசா உயர்த்தப்பட்டு உள்ளதால் வாட் வரியுடன் சேர்த்து டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.13-க்கு விற்கப்படும். பெட்ரோலின் பழைய விலை ரூ.70.60-ஆக இருந்தது.
அதேபோல், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.59.02-க்கு (வாட் வரியுடன் சேர்த்து) விற்பனை செய்யப்படும். இதன் பழைய விலை ரூ.57.82-ஆக இருந்தது. சென்னையைப் பொருத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.61-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.73-ஆகவும் விற்பனை செய்யப்படும்.
கடந்த ஆறு வாரங்களில் பெட்ரோல் விலை 4 முறையும், டீசல் விலை ஒரு மாதத்தில் 3 முறையும் உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.