ராகுல் அட்டாக் மோடி: ஓடலாம், ஒளியலாம் இறுதியில் உண்மை வெளிவரும்
பிரதமர் மோடியை குறித்து `எங்கு ஓடினாலும், தன்னை மறைத்துக் கொண்டாலும் இறுதியில் உண்மை வெளிவந்தே தீரும்` என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 23 ஆம் தேதி நள்ளிரவு சிபிஐ அமைப்பின் புதிய தற்காலிக இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமனம் செய்யப்பட்டார். இதற்க்கு முன்பு சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் முக்கிய நகரங்களில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த பேரணி சென்றனர். இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துக்கொண்டனர். பேரணியாக சென்ற காங்கிரஸ் கட்சியினர் டெல்லி லோதி காலனியில் அமைந்துள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது. உடனே டெல்லி போலீசார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் மற்றும் கிட்டத்தட்ட சுமார் 200 தொண்டர்களையும் கைது செய்தனர். அவர்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தங்கவைத்தனர். பின்னர் 20 நிமிடம் கழித்து அனைவரையும் விடுவித்தனர் போலீசார்.
டெல்லி லோதி காலனி காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம், பிரதமர் ஓடலாம், தன்னை மறைத்துக் கொள்ளலாம். அதனால் எதுவும் முடியபோவது இல்லை. இறுதியில் உண்மை வெளிவந்தே தீரும். சிபிஐ இயக்குனருக்கு எதிராக பிரதமர் செயல்பட்டார். பீதியினால் பிரதமர் இப்படி செயல்படுகிறார் எனக் கூறினார்.