புது டெல்லி: கொரோனா தொற்றின் இரண்டாவது அலையிலிருந்து நாடு மெல்ல மீண்டு வருகிறது. கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்தே நாட்டு மக்களிடம் அவ்வப்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்றும் மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமருடைய உரையின் முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்:


"உலகின் அனைத்து நாடுகளுடன் சேர்ந்து நாமும் கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வருகிறோம். கடந்த 100 ஆண்டுகளில் பரவிய மிகப்பெரிய பெருந்தொற்றான கொரோனா தொற்று உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. 


COVID மருத்துவமனைகள், வென்டிலேட்டர்கள் படுக்கைகள், சோதனை ஆய்வகங்களின் வலையமைப்பை உருவாக்க 1.5 ஆண்டுகளில் புதிய சுகாதார உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல்-மே மாதங்களில் 2 வது அலையின் போது, மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தேவை முன்னோடியில்லாத விகிதத்தில் அதிகரித்தது. விமானப்படை, ரயில்வே துறை, ஆக்சிஜன் டேங்கர்கள் என பலவித முயற்சிகளை எடுத்து நாம் ஆக்சிஜனை நாட்டின் பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்றோம். ஆக்சிஜன் உற்பத்தி சிறிய நேரத்தில் மிக அதிக அளவில் அதிகரிக்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் கொரோனா மருத்துவ சிகிச்சைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டன.


கொரோனாவுக்கு எதிரான இந்த போரில் தடுப்பூசி நமது பேராயுதமாக விளங்குகிறது. இன்றைய நிலையில், உலகம் முழுவதும் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மிக குறைந்த அளவிலேயே உள்ளன. நம்மிடம் தடுப்பூசி உற்பத்தி செய்யும் வசதிகள் இல்லாமல் இருந்திருந்தால், நம்முடைய இவ்வளவு பெரிய மக்கள் தொகைக்கு நாம் எங்கிருந்து தடுப்பூசிகளை வாங்கி இருப்போம்?


சுதந்திரத்துக்குப் பிறகு நாம் இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியில் மிகவும் பின் தங்கி இருந்தோம்.  நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த துறையில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினோம். 'மிஷன் இந்திரதனுஷ்' என்ற செயல்திட்டத்தை தடுப்பூசிகளுக்காகவே எங்கள் அரசு துவக்கியது. இதன் காரணமாக இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியும், தடுப்பூசி செலுத்தும் வேகமும் அதிகரித்தது. நமது நாட்டு குழந்தைகளுக்காக பல புதிய தடுப்பூசிகளையும் கொண்டு வந்து குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பாக ஆக்குவதில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தோம்.


அந்த நேரத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்று நம்மை சூழ்ந்துகொண்டது. இந்தியாவின் இத்தனை பெரிய மக்கள்தொகைக்கு எவ்வாறு தடுப்பூசி செயல்முறை சாத்தியப்படும் என உலக நாடுகள் சந்தேகப்பட்டன. ஆனால், நாம் நமது நாட்டில் இரண்டு தடுப்பூசிகளை உருவாக்கி விட்டோம். உலக நாடுகள் ஆச்சரியப்படும் அளவிற்கு அதிக அளவிலான மக்களுக்கு இன்று நாம் தடுப்பூசிகளை செலுத்தி விட்டோம். 


நமது விஞ்ஞானிகள் மீது நாம் அதிக நம்பிக்கையைக் கொண்டிருந்தோம். அவர்கள் கண்டிப்பாக உள்நாட்டு தடுப்பூசியை உருவாக்கி விடுவார்கள் என்ற நம்பிக்கை நம்மிடம் இருந்தது. அவர்களுக்கான அனைத்து வசதிகளும், நிதி உதவிகளும் அளிக்கப்பட்டன. தடுப்பூசிகளுக்கான ஆய்வுகள் நடந்துகொண்டிருந்தபோதே, நாம் தடுப்பூசி செலுத்தும் செயல்முறையை பற்றி திட்டமிடத் துவங்கினோம்.


நமது நாட்டில் இன்னும் பல புதிய தடுப்பூசிகளுக்கான ஆய்வு நடைபெற்று வருகிறது. குழந்தைகளுக்கான தடுப்பூசிகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான இரண்டு தடுப்பூசிகளின் சோதனைகள் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளன. இது தவிர மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தும் உருவாக்கப்பட்டு வருகின்றது.


தடுப்பூசி செலுத்தும் செயல்முறை குறித்து அதிக ஆய்வு செய்யப்பட்டது. யாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதோ அவர்களுக்கு முதலில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன் படி, முதலில் சுகாதாரப் பணியாளர்கள், முதியோர் என தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முன்னர் நமது முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படாமல் இருந்திருந்தால் என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும் என நினைத்தாலே அச்சம் உண்டாகிறது.


இதற்கிடையில், அனைத்து முடிவுகளையும் ஏன் மத்திய அரசே எடுக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது. எனினும், ஊரடங்கை அமல்படுத்துவது, கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்குவது, நிவாரணங்களை அளிப்பது என இவை அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன.  தடுப்பூசியின் அதிகாரம் ஏன் மத்திய அரசிடமே இருக்க வேண்டும் என மாநிலங்கள் கேள்வி எழுப்பின. மே 1 முதல் 25 சதவிகித கொரோனா தொற்று மருத்துவ, சிகிச்சை மற்றும் நிவாரணம் பணிகளுக்கான பொறுப்பு மாநிலங்ளுக்கு வழங்கப்பட்டன.  


ஜூன் 21 முதல் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தடுப்பூசிகளை அளிக்கும். எந்த மாநில அரசும் இதற்காக எதுவும் செலவிட வேண்டி இருக்காது. அனைத்து இந்தியர்களுக்கும் இந்திய அரசே இலவசமாக தடுப்பூசிகளை அளிக்கும். 


எனினும் தனியார மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்புபவர்கள் அப்படி செய்யலாம். ஆனால், தனியார் மருத்துவமனைகள் சர்வீஸ் சார்ஜாக 150 ரூபாயை மட்டுமே வசூலிக்க முடியும். இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 25 % தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் வாங்கி செலுத்தலாம். மீதமுள்ள 75 சதவிகித தடுப்பூசிகளை மத்திய அரசே வாங்கி மாநில அரசுகளுக்கு வழங்கும். எந்த மாநிலத்துக்கு எவ்வளவு டோஸ்கள் கிடைக்கும் என்பதை சில வாரங்களுக்கு முன்னரே மத்திய அரசு மாநில அரசுகளுக்கு தெரிவிக்கும். ஜூன் 21 முதல் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசிகளை அளிக்கத் துவங்கும்.


கொரொனா தடுப்பூசி தொடர்பான பல அச்சங்களும், பீதிகளும் கிளப்பப்பட்டுள்ளன. இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்களின் உறுதியை உடைக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. தடுப்பூசி குறித்த தவறான எண்ணங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த வதந்திகளை நம்பாமல் பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். பொது மக்களும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதில் உதவ வேண்டும்.


நாம் அனைவரும் இந்த கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் ஒன்றிணைந்து போராட வேண்டும். கொரோனா தொற்றை எதிர்த்து நாம் வெற்றி வெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. " என்று பிரதமர் தனது உரையில் கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR