பதவி ஏற்பிற்கு முன் அமைச்சகத்தின் உறுப்பினர்களை இறுதி செய்ய மோடி, அமித்ஷா சந்திப்பு!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்க உள்ளது. நரேந்திர மோடி 2-வது முறை பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சி நாளை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் மாலை 7 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்காக அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பதவியேற்பு நிகழ்ச்சி மற்றும் புதிய அமைச்சரவை குறித்தும் விவாதிக்க பாஜக தலைவர் அமித்ஷா, நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 5 மணி நேரம் நீடித்தது. அதில் அமைச்சரவை குறித்தும் இருவரும் விவாதித்தாக தெரிகிறது.


இதனிடையே அமித்ஷாவிற்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்று தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அப்படி அவருக்கு பதவி வழங்கப்படும் பட்சத்தில், பாஜகவின் “ ஒருவருக்கு ஒரு பதவி” என்ற கொள்கையால், அவர் பாஜக தலைவர் பதவியிலிருந்து விலக நேரிடும். இதன் காரணமாக புதிய பாஜக தலைவராக ஜே.பி. நட்டா நியமிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவின் மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜாவேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.