இரண்டாம் முறை பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி இன்று மாலத்தீவிற்கு செல்லவிருக்கும் நிலையில், மாலத்தீவு பயணத்திற்கு முன்னதாக கேரளா சென்றுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கிருக்கும் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார்.


தனி ஹெலிகாப்ட்டர் மூலம் இன்று காலை கோச்சியில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரிக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, இதைத் தொடர்ந்து கோயிலில் சிறப்பு தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியுடன் அம்மாநில ஆளுநர் சதாசிவம், மத்திய அமைச்சர் முரளிதரண் மற்றும் கேரளா தேவஸ்தாண அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோர் இருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதைத்தொடர்ந்து திருச்சூரில் பாஜக தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றினார். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கேரளாவுக்கு இப்போதுதான் முதன்முறையாக மோடி வருகை தருகிறார். 


ராகுல் காந்தி, தனது எம்.பி., தொகுதியான வயநாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், பிரதமர் மோடியும் கேரளாவுக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த இரண்டு நாட்களுக்கு ராகுல், வயநாட்டில் இருக்க உள்ளார். இந்தப் பயணத்தின் போது பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். 



இதற்கிடையில் கேரளப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிளார். “இந்தப் பயணங்கள் மூலம், நமக்கு அக்கம் பக்கத்தில் இருக்கும் நாடுகளுடனான நட்புறவுதான் மிக முக்கியம் என்பதை நாம் உணர்த்துகிறோம். இது நம் நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும்” என இரு நாட்டுப் பயணம் குறித்து மோடி கருத்து தெரிவித்துள்ளார்.


மாலத்தீவுக்குச் செல்லும் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். அதைத் தொடர்ந்து பல்வேறு ஒப்பந்தங்கள் இரு நாட்டுக்கும் இடையில் கையெழுத்தாக உள்ளன. மாலத்தீவுகளின் வளர்ச்சிக்காக இந்தியா சார்பில் பிரதமர் மோடி, நிதியுதவியும் செய்வார் என தெரிகிறது.