பிரதமர் மோடியின் `மன் கி பாத்` நிகழ்ச்சி: என்ன கூறினார்?
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம், "மன் கி பாத்" என்ற நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி, நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமையான இன்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு "மன் கி பாத்" நிகழ்ச்சியில் உரையாற்றினார். அதில்,
தீபாவளி பண்டிகை காலத்தில் டெல்லியில் உள்ள காதி கிராம்யோக் கடையில் ரூ.1 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது. கடந்த வருடத்தை விட காதி விற்பனை 90% அதிகரித்துள்ளது. இதன் மூலம் நெசவாளர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். காதியும், கைத்தறியும், ஏழை மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்துகின்றன.
காஷ்மீரின் குரேஷ் செக்டார் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடியது மறக்க முடியாத அனுபவம் எனக்கு. நமது பாதுகாப்பிற்காக மட்டுமல்லாமல் உலக அமைதிக்காகவும் ராணுவ வீரர்கள் போராடுகின்றனர். ஐ.நா., சபை அமைதிப்படையில் இணைந்து உலகத்தில் அமைதியை இந்திய ராணுவ வீரர்கள் கொண்டு வருகின்றனர்.
உலக அமைதிக்காக நமது ராணுவ வீரர்களை உலக நாடுகள் பாராட்டுகின்றன. ஐ.நா அமைதி பணியில் 18000 வீரர்களின் பங்களிப்பு உள்ளது. தற்போது 7000 வீரர்கள் இந்த பணியில் உள்ளனர். இந்த படையில் அதிகளவில் ராணுவ வீரர்கள் உள்ள நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
அமைதி நடவடிக்கையில் பெண்களும் முக்கிய பங்களிப்பு உள்ளது. அமைதியைநிலைநாட்டும் பணி எளிதானது அல்ல. பல கடினமான சூழ்நிலையில் இந்த பணியில் ஈடுபட வேண்டியுள்ளது. பல கலாசாரத்தை வீரர்கள் கடைபிடிக்க வேண்டியுள்ளது.
85 நாட்டு வீரர்களுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது. குழந்தைகள் புதிய இந்தியாவின் தலைவர்களாக இருப்பர். இளைஞர்களின் வாழ்க்கை தரம் மற்றும் நோய்க்கு எதிரான போராட்டத்தில் யோகா உதவும்.
இவ்வாறு அவர் பேசினார்.