புதுடில்லி: ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து மாநிலங்களவையில் உரையாற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் வன்முறை சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த வாரம் 18 ஆம் தேதி ஈத் பண்டிகைக்காக தப்ரேஸ் அன்சாரிதன் நண்பர்களுடன் ஜாம்ஷெட்பூரில் இருந்து தனது சொந்த கிராமமான கர்சவான் பகுதிக்கு பைக்கில் வந்துள்ளனர். அப்பொழுது ஒரு கும்பல் அவர்கள் பைக்கை திருடியதாக கூறி கடுமையாக தாக்கியுள்ளனர். அந்த கும்பலிடம் இருந்து அன்சாரியை தவிர மற்றவர்கள் தப்பிவிட, அன்சாரியை ஒரு மின்கம்பத்தில் கட்டி வைத்த தாறுமாறாக தாக்கியது கும்பல்.


அவரிடம் உன் பெயர் என்ன என்று கேட்கிறது. “சோனு” என்கிறார் அவர். அவர்கள் உண்மையான பெயரை கூறு என்று மிரட்டுகிறார்கள். உடனே ‘தப்ரேஸ்’ என்கிறார். முஸ்லீம் என்று தெரிந்ததும், உடனே கும்பல் ‘ஜெய்ஸ்ரீ ராம்’ என முழக்கத்துடன் அன்சாரியை கடுமையாக தாக்கத் தொடங்குகின்றனர். அன்சாரியை ‘ஜெய்ஸ்ரீ ராம்’, ‘ஜெய் அனுமான்’ போன்ற முழக்கங்களை எழுப்பச் சொல்லி தாக்குகிறார்கள். சுமார்  7 மணி நேரம் வரை அந்தக் கும்பல் அன்சாரியை கடுமையாக அடித்துள்ளனர். அதுவரை போலீசார் வரவே இல்லை. இதுக்குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.


பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசு அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. நான்கு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 24 ஆம் தேதி இறந்துவிட்டார். 


அன்சாரி தாக்கப்பட்ட வீடியோவை ஆதாரத்தைக்கொண்டு, அவரின் மனைவி சைஷ்தா பர்வீன், காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அன்சாரியின் மனைவி சைஷ்தா பர்வீனுக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.


ஆனால் இதுக்குறித்து பிரதமர் மோடி இதுவரை கருத்து கூறவில்லை என்றும், கண்டனங்களை தெரிவிக்கவில்லை என்றும் சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டன.


இந்தநிலையில், இன்று ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து மாநிலங்களவையில் உரையாற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் வன்முறை சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 


ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி, இதுபோன்ற சம்பவங்கள் வேதனையை அளிக்கிறது. குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். ஆனால் இதற்காக ஒட்டுமொத்த ஜார்க்கண்ட் மாநிலத்தை குறைசொல்வது தவறு. இது குற்றத்திற்க்கு காரணமானவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கும் எனக் கூறினார்.


பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த அதே நாளில் தான் தப்ரேஸ் அன்சாரியை கும்பல் தாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.