எதிர்க்கட்சியின் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமானது: பிரதமர் மோடி!
குறைந்த அளவில் எதிர்கட்சியினர் இருந்தாலும் அவர்களின் உணர்வை மதிப்போம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!!
குறைந்த அளவில் எதிர்கட்சியினர் இருந்தாலும் அவர்களின் உணர்வை மதிப்போம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!!
17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எம்.பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவி பிராமணம் செய்து வைக்கிறார். அந்தவகையில், வாரணாசி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.
இதையடுத்து கூட்டத்திற்கு முன் நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்; இன்று புதிய கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. புதிய நம்பிக்கை மற்றும் கனவுகள் நிறைவேற அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பாடுபடுவோம். எதிர்கட்சிகளின் கருத்துக்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. அவர்கள் எத்தனை எண்ணிக்கையில் உள்ளனர் என்பது முக்கியமல்ல என்றார். சுதந்திர இந்தியாவில் அதிகம் பெண்கள் உறுப்பினர்கள் தற்போது வந்துள்ளனர். ஏழைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுபவராக உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.
ஏழைகள் தேவையை நிறைவேற்றுவதே எங்களின் நோக்கம். மக்களின் கனவுகளை நிறைவேற்றவும் அவர்களின் வளர்ச்சிக்காக உழைக்கவுள்ளோம். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையில் நாங்கள் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். அவர்களின் நம்பிக்கை நிறைவேறும் வகையில் பாடுபடுவோம். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் அமையும் தற்போதைய 17ஆவது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெண் வாக்காளர்கள் மற்றும் பெண் எம்பிகள் அதிகரித்துள்ளனர்.
ஜனநாயகத்தில் எதிர்கட்சி மிகவும் முக்கியமானது. அதன் மதிப்பை நாங்கள் அறிவோம். வலுவான எதிர்கட்சி ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அவசியம். குறைவான எண்ணிக்கையில் எதிர்கட்சியினர் இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. அவர்களின் உணர்வை மதிப்போம். மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்கி அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.