ஊழலில் இருந்து நாட்டின் சொத்துகளை பாதுகாக்க என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன் என ’நானும் காவலாளி’தான் என்ற தலைப்பில் பிரதமர் மோடி காணொலியில் தொண்டர்களிடம் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் தங்களின் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சரம் செய்து வருகிறது. இந்நிலையில், ஊழலில் இருந்து நாட்டின் சொத்துகளை பாதுகாக்க என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன் என ’நானும் காவலாளி’தான் என்ற தலைப்பில் பிரதமர் மோடி காணொலியில் தொண்டர்களிடம் தெரிவித்துள்ளார். 


“நானும் காவலாளி” தான் என்ற பிரச்சாரத்துக்கு ஆதரவளிக்கும் மக்களுடன் டெல்லி டல்கதோரா மைதானத்தில் பிரதமர் உரையாற்றினார். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் காணொலி மூலம் அவர் உரையாற்றவும் இந்த நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.


நிகழ்ச்சியியில் பேசிய மோடி கூறியதாவது, தேசமும், குடிமக்களும்தான் தனக்கு பிரதானமே தவிர தேர்தல்கள் அல்ல. இந்தியாவை வளம் மிக்க நாடாக மாற்றுவது உறுதி என அவர் தெரிவிவத்தார். பயங்கரவாதத்தின் மையப்புள்ளி எது என்று ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் தெரியும் என்று கூறிய பிரதமர், பாகிஸ்தானுக்கு எதிராக தான் விரைவாக நடவடிக்கை எடுப்பதை தேர்தல்கள் தடுக்க முடியாது என தெரிவித்தார். பாலகோட் தாக்குதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, பாலக்கோட் தாக்குதலை நான் நடத்தவில்லை; நமது வீரர்கள் தான் நடத்தினார்கள். பாதுகாப்பு படைகள் தான் அந்த தாக்குதலை நடத்தியதாக கூறினார். பாதுகாப்பு படைகள் மீதும், அவர்களது திறன்கள் மீதும் தான் முழு நம்பிக்கை வைத்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.


2014 ஆம் ஆண்டு தன் மீது நம்பிக்கை வைத்து தேசத்துக்கு சேவை புரியும் வாய்ப்பை மக்கள் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார். தான் பிரதமராக பொறுப்பேற்றது முதல் ஊழல்வாதிகளிடம் இருந்து நாட்டின் செல்வத்தை பாதுகாப்பதற்கு தன்னால் முடிந்த வரைக்கும் சிறப்பாக முயன்றுள்ளதாக தெரிவித்தார். தான் எப்போதும் பொதுமக்கள் பணத்தை தவறாகப் பயன்படுத்தியது இல்லை என்று திட்டவட்டமாக கூறிய மோடி, மக்கள் அனைவரும் ஒற்றிணைந்தால், யாரும் நாட்டைக் கொள்ளையடிக்க முடியாது என்று கூறினார்.



சீசனுக்கு ஏற்ப காங்கிரஸ் கட்சி பொய் பிரச்சாரம் செய்வதாக பிரதமர் சாடினார். டெல்லிக்கு தேர்தல் என்றால் சகிப்பின்மை இல்லை என்றும், பீகாரில் தேர்தல் என்றால், மோடி இடஒதுக்கீடு முறைக்கு எதிரானவர் எனக் கூறி காங்கிரஸ் கட்சி பொய் பிரச்சாரம் செய்வதாக மோடி விமர்சித்தார். சில கட்சிகளின் போலியான தேர்தல் வாக்குறுதிகளை நம்பாமல் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.


ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று நாட்டு மக்களிடம் தான் உறுதி அளிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். ஒரு அரசு மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அதிகாரத்திற்கு வருவது, நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமானது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.