வரும் 26-ம் தேதி அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்துப் பேச இருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சந்திப்பால் இந்திய-அமெரிக்க உறவு மேலும் வலுவடையும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


கடந்த ஜனவரியில்அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, மோடி அவரை முதல் முறையாக சந்தித்துப் பேச இருக்கிறார். அமெரிக்காவில் புதிய அரசு அமைந்த பிறகு மோடி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதும் இதுவே முதல் முறையாகும்.


இதற்கு முன்பு அதிபராக இருந்த பராக் ஒபாமாவுடன் மோடி மிகவும் நெருக்கமாக நட்பு பாராட்டி வந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.


ஆனால், டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு, இந்தியாவின் நலன்களை பாதிக்கும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முக்கியமாக, இந்திய ஐடி பணியாளர்களுக்கு விசா கட்டுப்பாடு விதித்தது; இந்தியாவைக் குறை கூறி பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது போன்ற நிகழ்வுகளுக்கு மத்தியில் டிரம்ப்பை மோடி சந்தித்துப் பேச இருக்கிறார். எனவே, இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.


அமெரிக்க அதிபர் விடுத்த அழைப்பின் பேரில்தான் இருநாள் பயணமாக மோடி வாஷிங்டனுக்குச் செல்கிறார். இந்தச் சந்திப்பை முடிவு செய்வதற்காக இரு தலைவர்கள் மூன்று முறை தொலைபேசியில் பேசியுள்ளனர். வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிபர் இல்லமான வெள்ளை மாளிகையில் 26-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.


சமீபகாலத்தில் இந்தியா, அமெரிக்கா இடையே பாரீஸ் ஒப்பந்தம் உள்ளிட்ட சில விஷயங்களில் வேறுபட்ட கருத்துகள் இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள பொதுவான பிரச்னைகள் குறித்து டிரம்ப்புடன் மோடி விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எச்1பி விசாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்த இந்தியாவின் கவலையை டிரம்ப்பிடம் மோடி தெரிவிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில், இதனால் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.


இவை தவிர, தெற்காசியாவில் நிலவி வரும் சூழ்நிலை, இந்தியா மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏவிவிடுவது, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு, அணு விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவது, இந்திய-அமெரிக்க வர்த்தகம்-பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்கள் குறித்து டிரம்ப்புடன் மோடி பேசுவார் என்று கருதப்படுகிறது.