இந்திய பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார்...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய பிரதமர் மோடி இன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைக்கிறார். சுமார் 50 கோடி பேர் பயன்பெறும் வகையில் ஆரம்பிக்கப்படவுள்ள இத்திட்டமானது, உலகிலேயே மருத்துவ பாதுகாப்புக்காக அரசாங்கத்தால் துவங்கப்படும் பெரிய திட்டமாக கருதப்படுகிறது. 


2018 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்த திட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்ட திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஆண்டு ஒன்றிற்கு ஒவ்வொரு குடும்பமும் ரூ.5 லட்சம் வரையில் ஏற்படும் மருத்துவ செலவுகளை இந்திய அரசே ஏற்றுக்கொள்ளும். நாட்டின் எந்தவொரு மூலையில் உள்ள மருத்துவமனையிலும் இந்த திட்டத்தின் கீழ் ஏழைகள் பயன்பெற முடியும். இதனால் 10.74 கோடி குடும்பங்கள் பயனடையும். இத்திட்டத்தின்கீழ் நாட்டின் எங்கு வேண்டுமானாலும், அரசாங்க மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைகளில் பயனாளர்கள் சிகிச்சை பெற முடியும். 


நாடு முழுவதிலும் சுமார் 15 ஆயிரம் மருத்துவமனைகளில் இருந்து இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு மத்திய அரசுக்கு விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும், அவற்றில் 7,500 விண்ணப்பங்கள் தனியார் மருத்துவமனைகளில் இருந்து வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த திட்டத்திற்காக ஏற்படும் மொத்த செலவுத் தொகையில் மத்திய அரசு 60 சதவிகிதமும், மாநில அரசுகள் 40 சதவிகிதமும் பங்களிக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை பிரதமர் மோடி இன்று ஜார்கண்டில் நடக்கும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கிறார். இதுதான் உலகில் பெரிய காப்பீட்டு திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.