குடியுரிமை மீதான வன்முறை துரதிர்ஷ்டவசமானது: பிரதமர் மோடி ட்வீட்
`குடியுரிமை திருத்தச் சட்டம் மீதான வன்முறை எதிர்ப்பு துரதிர்ஷ்டவசமானது மற்றும் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது எனவும், அமைதியை நிலைநாட்டுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி
புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (Citizenship Amendment Act) எதிராக நாட்டின் பல நகரங்களில் நடந்து வரும் வன்முறை மற்றம் ஆர்ப்பாட்டங்கள் துரதிர்ஷ்டவசமானது என பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) கூறியுள்ளார். எதிர்ப்பு என்ற பெயரில் பொது சொத்துக்களை சேதப்படுத்துவது, மற்றவர்களின் வாழ்க்கையில் தலையிடுவது தவறு என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இன்று (திங்கக்கிழமை), "குடியுரிமை திருத்தச் சட்டம் மீதான வன்முறை எதிர்ப்பு துரதிர்ஷ்டவசமானது மற்றும் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. விவாதம், கலந்துரையாடல் மற்றும் அதிருப்தி ஆகியவை ஜனநாயகத்தின் இன்றியமையாத பகுதிகள். ஆனால் ஒருபோதும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது என்றும், சாதாரண வாழ்க்கையைத் தொந்தரவு செய்வது நமது நெறிமுறைகள் இல்லை என்றும் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி மேலும் தனது ட்விட்டரில், "குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 பாராளுமன்றத்தின் இரு அவைகளின் பெரும் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. ஏராளமான அரசியல் கட்சிகள் மற்றும் எம்.பி.க்கள் அந்த மசோதாவை ஆதரித்தனர். இந்த சட்டம் இந்தியாவின் பழைய கலாச்சாரரம், நல்லிணக்கம், இரக்கம் மற்றும் சகோதரத்துவத்தை பிரதிபலிக்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டம் (Citizenship Amendment Act) எந்த மதத்தையும், இந்திய குடிமக்களையும் பாதிக்காது என்று எனது சக இந்தியர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இந்த சட்டத்தை பற்றி ஒரு இந்தியர் கவலைப்பட ஒன்றுமில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் கூறிய அவர், "இந்த சட்டம் பல ஆண்டுகளாக துன்புறுத்தல்களை எதிர்கொண்டவர்களுக்கும், இந்தியாவைத் தவிர வேறு எந்த இடமும் இல்லை என்ற நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே. இந்தியர்கள் அனைவரும், குறிப்பாக ஏழைகள், தலித்துகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களின் வலுவூட்டலுக்காக ஒன்றிணைந்து செயற்படுங்கள். எங்களைப் பிரித்து அமைதியின்மையை உருவாக்க சுயநல குழுக்களை நாங்கள் அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
அமைதியை நிலைநாட்டுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி, "அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை பேண வேண்டிய நேரம் இது. எந்த விதமான வதந்திகளிலிருந்தும், பொய்களிலிருந்தும் விலகி இருக்குமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுங்கள் எனவும் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.