நாடாளுமன்ற தேர்தலில் காங்., கட்சியை விட BJP 3 மடங்கு அதிக இடங்களை பெறும்: மோடி
நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெறும் இடங்களை காட்டிலும், மூன்று மடங்கு அதிகமாக, பா.ஜ.க பெறும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்!!
நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெறும் இடங்களை காட்டிலும், மூன்று மடங்கு அதிகமாக, பா.ஜ.க பெறும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு நாளைக்கூட, காங்கிரஸ் கட்சி அரசியலாக்க முனைவதாக, பிரதமர் குற்றஞ்சாட்டினார். ராகுல் காந்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கு நேரம் இருக்கும்போது, ஜாலியன் வாலாபாக் துயரத்தில் உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு வணக்கும் செலுத்தும், துணை குடியரசு தலைவரின் நிகழ்ச்சியில் பங்கேற்க மட்டும் நேரம் இருப்பதில்லை என்றார்.
அப்துல்லா மற்றும் முப்தி குடும்பத்தினர் மாறி மாறி ஆட்சி செய்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சியை முற்றாக சீரழித்துவிட்டதாக பிரதமர் குற்றஞ்சாட்டினார். தீவிரவாதிகளை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று கொன்றழிக்கும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்தோ, வான்வழித் தாக்குதல் குறித்து கேள்வியுற்றால், காங்கிரஸ் கட்சி பதற்றப்படுவது ஏன்? என, தமக்கு இதுவரை விளங்கவில்லை என்றார். சர்ஜிக்கல் ஸ்டிரைக் உள்ளிட்டவை நடைபெறும்போது, நமது ராணுவ வீரர்கள் மீது நம்பிக்கையின்றி, அவர்களின் வீரதீரங்கள் குறித்து காங்கிரஸ் சந்தேகம் எழுப்புவதாகவும், பிரதமர் குற்றம்சாட்டினார்.
இதுபோன்ற காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் அனைத்தும், நமது முப்படை வீரர்களின், திறனை, அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுவதாக உள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடி சாடினார். கூட்டணி கட்சி தலைவரான உமர் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீருக்கு என தனியார் பிரதமர் தேவை எனக் கூறி வரும் நிலையில், அதுகுறித்த காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? என்றும் மோடி வினவினார். யாராக இருந்தாலும், நாட்டை துண்டாட ஒருபோதும், அனுமதிக்க மாட்டோம் என்று, பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்திய திருநாட்டில், 60 ஆண்டுகளாக ஒரு கட்சி அநீதி இழைத்து வந்த நிலையில், யார் தான், அதற்கு நீதி வழங்குவது, என காங்கிரசு கட்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார். நாட்டின் ஜனநாயகத்திற்கு, குடும்ப அரசியல் மிகப்பெரும் அச்சுறுத்தல் என பிரதமர் மோடி குறிப்பிட்டார். நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெறும் இடங்களை காட்டிலும், மூன்று மடங்கு அதிகமாக, பா.ஜ.க பெறும் என கருத்துக்கணிப்புகள், தேர்தல் ஆய்வு முடிவுகளின் மூலம் தெரியவந்திருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். 2014ஆம் ஆண்டை காட்டிலும், தற்போது, பாஜவுக்கு ஆதரவான அலை, பலமாக வீசுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.