ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க கிர்கிஸ்தான் செல்லும் பிரதமர் மோடி விமானம் பாகிஸ்தான் வான் வழி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிர்கிஸ்தான் நாட்டில் நடக்க உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி விமானம் விமானம் மூலம் பறக்கவுள்ளார். இந்த மாநாட்டின் இடையே ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.


இதற்காக பாகிஸ்தான் வழியாக செல்ல அவர் திட்டமிட்டு இருந்தார். ஆனால் கடந்த பிப்ரவரி 14–ஆம் தேதி நடைப்பெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய போர் விமானங்கள் பிப்ரவரி 26–ஆம் தேதி பாகிஸ்தான் சென்று பயங்கரவாதிகள் முகாம்களை லேசர் குண்டுகள் போட்டு துவம்சம் செய்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வான்வெளியை அந்த நாட்டின் இம்ரான்கான் அரசு மூடி வைத்துள்ளது.


இந்நிலையில் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய அரசின் சார்பில் பாகிஸ்தான் அரசிடம் கேட்டுக்கொண்டது. இந்தியாவின் கோரிக்கையை பரிசீலித்த இம்ரான்கான் அரசு, மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இதை பாகிஸ்தான் உயர் அதிகாரி ஒருவர் நேற்று உறுதி செய்தார்.


இந்நிலையில் தற்போது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க கிர்கிஸ்தான் செல்லும் பிரதமர் மோடி விமானம் பாகிஸ்தான் வான் வழி செல்லாது என இந்திய வெளியுறுவு துறை தெரிவித்துள்ளது. மாறாக ஓமன் வழியாக பயணிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் செல்கிறார். ஆனால் அவரை பிரதமர் மோடி சந்திக்கும் திட்டம் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.