‘கோட்சே ஒரு தீவிரவாதி அல்ல ஒரு தேசபக்தர்’ -பிரக்யா சிங்
`நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தராக இருந்தார். அவர் தீவிரவாதி கிடையாது` என பாஜக வேட்பாளரான பிரக்யா சிங் கூறியுள்ளார்.
கடந்த 12 ஆம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது., "முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்" எனப் பிரச்சாரம் செய்தார்.
இது பெரும் விவாததுக்கு உள்ளானது. பாஜக மற்றும் இந்து அமைப்பு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில அரசியல் தலைவர்கள் கண்டனமும், சில அரசியல் தலைவர்கள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். கமலில் கருத்துக்கு பிரதமர் மோடி உட்பட பாஜக அரசியல் தலைவர்கள் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும், அக்கட்சியின் வேட்பாளரான பிரக்யா சிங் இன்று ஏஎன்ஐ செய்து ஊடகத்துக்கு பேட்டி அளித்தார்.
அப்பொழுது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறிய நாதுராம் கோட்சே கருத்துக்கு பதில் அளித்த அவர் கூறுகையில், "நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தராக இருந்தார். அவர் எப்பொழுதும் தேசபக்தராகவே இருப்பார். நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என்று கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்பட வேண்டும் எனக்கூறினார்."
கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பு குற்றச்சாட்டில் முக்கிய குற்றவாளி சாத்வி பிரக்யா தாக்கூர் என்பது குறிப்பிடத்தக்கது.