டெல்லியில் நேற்று நடந்த பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஸீ - ஜிம்பிங், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் உள்ளிட்ட பல்வேறு உலகத்தலைவர்கள் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். 


இந்நிலையில் பிரதமர் தேர்வு, புதிய அரசு பொறுப்பேற்பு ஆகியவற்றுக்காகப் பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர் கள் கலந்து கொண்டனர்.


இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் நாடாளுமன்ற குழு தலைவராகவும் (பிரதமர்), தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராகவும் மோடி முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். இதில் பா.ஜனதா நாடாளுமன்ற குழு தலைவராக மோடியின் பெயரை கட்சித்தலைவர் அமித்ஷா முன்மொழிய, அதை மத்திய மந்திரிகளான ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி ஆகியோர் வழிமொழிந்தனர்.


பின்னர் மோடி ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, புதிய அரசு அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரினார்.


இதைத்தொடர்ந்து, மோடியை புதிய பிரதமராக நியமித்த ஜனாதிபதி, புதிய ஆட்சி அமைக்க அவருக்கு அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து, மோடி மீண்டும் பிரதமராக இந்த வாரம் பதவி ஏற்க இருக்கிறார்.