ஜனாதிபதி தேர்தல்: ராம்நாத் கோவிந்த் vs மீராகுமார்
ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நாடு முழுவதும் நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள சட்டசபை வளாகத்தில் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஓட்டுக்களை செலுத்தி வருகின்றனர்.
ஜூலை 20-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
முலாயம், ஷிவ்பால் ராம்நாத் கோவிந்திற்கு வாக்களிப்பு.
ஆந்திரா முதல்வர் சி.சந்திரபாபு நாயுடு அமராவதியில் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு வாக்களிக்கிறார்.
பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடியில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் பலர் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர். அதனை தொடர்ந்து எம்.பி.க்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.
தமிழக சட்டசபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி முதல் வாக்கை பதிவு செய்தார்.
ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்தார்.
மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி ஆவது மகிழ்ச்சி - மாயாவதி
கேரளாவை சேர்ந்த ஐ.யூ.எம்.எல். கட்சி எம்.எல்.ஏ அப்துல்லா சென்னையில் வாக்களித்தார்.
திமுக மூத்த தலைவர் துரைமுருகன் வாக்களித்தார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கை பதிவு செய்தார்.
புதுச்சேரி தலைமைச்செயலக வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி வாக்களித்தார்.
.................................................................................................................................................
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம், அடுத்த வாரம் முடிவுக்கு வரும் நிலையம் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (ஜூலை 17) நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து பாஜக கூட்டணியும், எதிர்க் கட்சிகள் அணியும் வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டன.
இறுதியில் பீகார் மாநில கவர்னராக இருந்து வந்த ராம்நாத் கோவிந்த் (வயது 71) பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தலித் இனத்தலைவர் ஆவார்.
இவரை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான 17 எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீராகுமார் (72) நிறுத்தப்பட்டுள்ளார். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தலித் இனத்தலைவர் ஆவார்.
கடந்த 23-ம் தேதி பாராளுமன்ற மக்களவை தலைமைச்செயலாளர் அனுப் மிஷ்ராவிடம் பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில முதல் மந்திரிகள் முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீராகுமார் தனது வேட்புமனுவை சென்ற 28-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் தாக்கல் செய்தார்.
இந்த தேர்தலில்,
776 தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள், 4120 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4896 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று ஜனாதிபதி தேர்தலில் வாக்குப்பதிவு நடக்கிறது. டெல்லியில் பாராளுமன்ற வளாகத்திலும், தமிழகத்தில் சென்னையில் அமைந்துள்ள சட்டசபை வளாகத்திலும், இதே போன்று பிற மாநிலங்களில் உள்ள சட்டசபை வளாகங்களிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்தம் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது. வாக்குப்பதிவை தேர்தல் கமிஷனின் 33 பார்வையாளர்கள் மேற்பார்வையிடுகிறார்கள்.
கடந்த ஆண்டு ஹரியானா மாநிலத்தில் நடந்த டெல்லி மேல்சபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட பேனா மையினால் ஏற்பட்ட சர்ச்சையால்தான், இந்த தேர்தலில் முதல் முறையாக தேர்தல் கமிஷன் பிரத்யேக பேனாக்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
வருகிற 20-ம் தேதி காலை 11 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. அதே நாளில் முடிவு அறிவிக்கப்பட்டு விடும்.
புதிய ஜனாதிபதி 25-ம் தேதி பதவி ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.