பிரதமர் மோடியின் சொந்த ஊரில், ஜாதியை காரணம் காட்டி சத்துணவு ஊழியரை தற்கொலைக்கு தூண்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநிலம் வடநகர் நகரத்தின் ஆரம்ப பள்ளி ஒன்றில் சத்துணவு ஊழியராக பணிபுரிந்து வந்தவர் மகேஷ் சௌஹான். இவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் இவரின் கண்கானிப்பில் மாணவர்களுக்கு உணவு அளிக்க விரும்பாத அப்பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் இவரை தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.


இதனால் மனமுடைந்த மகேஷ், தன் தற்கொலைக்கான காரணத்தினை குறிப்பிட்ட கடுதாசி ஒன்றினை தன்னுடன் வைத்து அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றின் மேல் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.


அவரின் சடலத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கடுதாசியின் அடிப்படையில் அவரது மனைவி இல்லெபென், வடநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக விரைவான விசாரணைக்கு மாநில சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ஈஸ்வர் பர்மர் உத்தரவிட்டுள்ளார்.


இந்நிலையில் இச்சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 3 ஆசிரியர்களும், விடுப்பின் கீழ் தலைமறைவாகியுள்ளனர். அவர்களின் தேடும் பணி நடைப்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவம் நிகழ்ந்துள்ள வடநகர், பிரதமர் மோடியில் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலியான மகேஷ் சம்பந்தப்பட்ட சாயிக்பூர் ஆரம்ப பள்ளியில் கடந்த ஓராண்டுகளாக ரூ.1600 க்கு சத்துணவு ஊழியராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.