அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி
டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 3 நாள் பயணமாக இன்று பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டுக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.
இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் தூதரக உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி அதன் நினைவாக இந்த பயணம் ஆகும். மேலும் இதனுடன் இஸ்ரேல் நாட்டுக்கு இந்திய பிரதமர் செல்வது இதுவே முதல் முறை.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவுடன் மோடி நடத்த போகும் பேச்சுவார்த்தையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக விவசாயம் மற்றும் தண்ணீர், கண்டுபிடிப்புகள், வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளி ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது.
இதுதவிர இரு நாட்டு மக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்துவது, விமான போக்குவரத்து, முதலீடு ஆகியவைகளை வலுப் படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்த பயணத்தின்போது உத்தரபிரதேச மாநில அரசுடனும் கங்கையின் ஒரு பகுதியை தூய்மைப்படுத்துவது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
இஸ்ரேல் இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு பிரதமர் நேதன்யாஹு விமான நிலையத்துக்கு வந்து வரவேற்கிறார்.
நாளை பிரதமர் மோடிக்கு டெல் அவிவ் நகரில் உள்ள இந்தியர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி உள்பட மோடி பங்கேற்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளிலும் இஸ்ரேல் பிரதமரும் கலந்து கொள்கிறார். ஹைபா நகரில் உள்ள இந்திய கல்லறையில் இந்திய ராணுவ வீரர்களின் நினைவிடங்களில் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.
நாளை இஸ்ரேல் ஜனாதிபதி ரேவன் ரிவ்லின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஐசக் ஹெர்சோக் ஆகியோரையும் மோடி சந்தித்து பேசுகிறார்.
இந்த பயணத்தை முடித்துக் கொண்டு, ஜெர்மனி செல்லும் மோடி அங்கு நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கிறார்.