புது தில்லி: மொரீஷியஸில் உள்ள உச்சநீதிமன்ற கட்டிடம், தலைநகர் போர்ட் லூயிசில், இந்திய உதவியில் கட்டப்பட்டுள்ள முதல் உள்கட்டமைப்பு திட்டமாகும். கோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் இந்த மைல்கல் திட்டம் நிறைவடைந்துள்ளது. இந்த திட்டத்திற்கு இந்திய அரசு 28.12 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான மானியத்தை அளித்து உதவியுள்ளது என வெளியுறவுத் துறை அமைச்சக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மொரீஷியஸ் பிரதமர் பிரவீந்த் ஜுக்னாத்துடன் (Pravind Jugnauth) கூட்டாக கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தனது வீடியோ உரையின் போது, ​​"இந்தியாவின் வளர்ச்சி ஒத்துழைப்பு எந்தவொரு நிபந்தனையுடனும் வரவில்லை, எந்தவொரு அரசியல் அல்லது வணிகரீதியான கருத்தின் தாக்கம் இதில் இல்லை” என்று கூறினார்.


பிராந்தியத்தில் நிபந்தனையற்ற அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான இந்த  மறைமுக குறிப்பு, சீனாவை நோக்கி கூறப்பட்டதாகும். வெளிநாடுகளில் தன் அனைத்து வளர்ச்சித் திட்டங்களின் மூலமும் கொள்ளையடிக்கும் பழக்கமும் ஏகாதிபத்திய ஆதிக்கம் செலுத்தும் பழக்கமும் சீனாவுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


பிரதமர் மோடி, "அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான அடிப்படைக் கொள்கை, கூட்டாளர்களுக்கான மரியாதை மற்றும் அபிவிருத்தி பாடங்களை பகிர்ந்து கொள்வதே ஆகும்" என்றார். மொரீஷியஸுடனான அபிவிருத்தி ஒத்துழைப்பு, அபிவிருத்தி கூட்டாண்மை தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையின் மையத்தில் உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.



இதில், இந்திய முன்னேற்ற ஒத்துழைப்பு, ‘மரியாதை', 'பன்முகத்தன்மை', 'எதிர்காலத்திற்கான பராமரிப்பு' மற்றும் 'நிலையான அபிவிருத்தி' ஆகியவற்றின் முக்கிய மதிப்புகளால் கோடிட்டுக்காட்டப் பட்டுள்ளது என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.  


நவீன வடிவமைப்பு மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய உச்சநீதிமன்ற கட்டிடம் மொரீஷியஸ் (Mauritius) நீதித்துறைக்கு பொருத்தமான இடமாகவும், ஒத்துழைப்பின் அடையாளமாகவும், இந்தியா மற்றும் மொரீஷியஸின் பகிரப்பட்ட மதிப்பின் அடையாளமாகவும் இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். ஆரம்ப கால மதிப்பீடுகளை விட குறைந்த செலவு மற்றும் கால அளவில் இந்த திட்டம் நிறைவடைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


மொரீஷியஸ் மக்களின் சாதனைகளில் இந்தியா பெருமிதம் கொள்கிறது என்பதைக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா-மொரீஷியஸ் கூட்டாண்மை வரும் ஆண்டுகளில் இன்னும் உயரக்கூடும் என்று தான் நம்புவதாக தெரிவித்தார்.


இரு நாடுகளுக்கிடையேயான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் நெருக்கமான உறவுகளை பிரதிபலிக்கும் விதமாக இந்த திட்டத்திற்கு இந்தியா அளித்த ஆதரவிற்கு பிரதமர் ஜுக்னாத் தனது ஆழ்ந்த பாராட்டுகளை தெரிவித்தார். "எங்கள் நாடும், எங்கள் மக்களும் உங்கள் ஆதரவுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்," என்று அவர் பிரதமர் மோடியிடம் கூறினார்.


இந்திய உதவியுடன் உச்சநீதிமன்ற கட்டிடத்தை நிர்மாணிப்பது, மொரீஷியஸில் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதில் ஒரு புதிய மைல்கல் என்றும், இது, மொரீஷியஸ் நீதி முறையை மிகவும் திறமையாகவும், அணுகக்கூடியதாகவும், அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் மாற்ற உதவும் என்றும் மொரீஷியஸ் பிரதமர் குறிப்பிட்டார்.


ALSO READ: உதவிக்கரம் நீட்டும் இந்தியா: கோவிட்-19 நிவாரணத்திற்காக இலங்கையுடன் Currency Swap!!