பிரதமர் நரேந்திர மோடி எனது மூத்த சகோதரர்: சவுதி அரேபியா பட்டத்து இளவரசர்
பிரதமர் நரேந்திர மோடியை தனது மூத்த சகோதரராக நான் பார்க்கிறேன் என அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
புது தில்லி: பாகிஸ்தான் சென்ற சவூதி இளவரசர் சல்மான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இருநாடுகள் இடையே ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட இரு நாடுகளும் உடன்படிக்கை செய்துக் கொண்டன. புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானிடம் சவூதி அரேபியா அரசு கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தானின் சுற்றுபயணத்தை முடித்துக்கொண்டு அரசு முறை பயணமாக நேற்று இரவு இந்தியா வந்த சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். இன்று காலை குடியரசு தலைவர் மாளிகையில் சவுதி இளவரசருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பொழுது நாட்டின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியும் உடன் இருந்தனர்.
அப்பொழுது பேசிய சவுதி இளவரசர், பிரதமர் நரேந்திர மோடியை தனது மூத்த சகோதரராக நான் பார்க்கிறேன். நாங்கள் இருவரும் சகோதரர்கள், அவர் பெரியவர், நான் அவருடைய இளைய சகோதரன்.
இரு நாடுகளின் பிரதிநிதிகள் குழு கூட்டம் இன்று டெல்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுஸில் நடைபெற்று வருகிறது. முகமது பின் சல்மானின் வருகையால் இந்தியா-சவூதி அரேபியா இடையிலான உறவுகள் மேம்பட சில முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக்கின என தகவல்கள் வந்துள்ளது.