வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஓட்டு விவகாரம்- மந்திரிசபையில் ஒப்புதல்
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவில் வாக்காளர்களாக தாங்கள் பதிவு செய்துள்ள தொகுதிகளில் வேறு ஒருவர் மூலம் தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம் என்ற சட்ட திருத்தத்திற்கு மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் தேர்தலில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அதிகபட்சமாக 12,000 பேர் மட்டுமே வாக்களிப்பதாக தெரிவிக்கின்றன. ஏனெனில் வாக்களிப்பதற்காக அவர்கள் அதிக செலவு செய்து இந்தியாவுக்கு வருவதற்கு தயாராக இல்லை என்பதும் தெரியவந்தது.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. இந்தியாவில் தேர்தல் நடைபெறும் போது, அவர்கள் நேரில் வந்து வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை தற்போது உள்ளது. இதனால், வெளிநாடுகளில் வசிக்கும் 1.1 கோடி இந்தியர்கள் பாதிக்கப்படுகின்றனர். வெளிநாடுகளில் வசிப்போருக்கு 114 நாடுகளில் அங்கிருந்தே ஓட்டளிக்கும் உரிமையை வழங்கியுள்ளன. 20 ஆசிய நாடுகளில் இந்த வசதி உள்ளது. இந்த வசதியை இந்தியாவிலும் ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. தேர்தல் துணை ஆணையர் வினோத் ஜட்ஷி தலைமையில், மத்திய சட்டத்துறை, வெளியுறவுத்துறை அதிகாரிகள் 12 பேர் அடங்கிய குழு இதுகுறித்து ஆய்வு செய்து சுப்ரீம் கோர்ட்டிற்கு அறிக்கை அளித்துள்ளது.
அந்த அறிக்கையில், ராணுவ வீரர்களுக்கு இருப்பதைப் போல் பதிலி வாக்கு முறை அல்லது மின்னஞ்சல் மூலம் வாக்கு பதிவு செய்யும் முறையை அமல்படுத்தலாம். இந்த வசதியை அளிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து அவர்கள் வாக்களிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவருமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணைய நிபுணர்கள் பரிந்துரை செய்திருந்தது. இதையடுத்தே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் சட்ட அமைச்சகம் கொண்டு வந்த திருத்தத்திற்கு மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்நிலையில் இதன் மூலம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இந்தியர்களும், வெளிநாடுவாழ் இந்தியர்களும் இந்தியாவில் வாக்காளர்களாக தாங்கள் பதிவு செய்துள்ள தொகுதிகளில் வேறு ஒருவர் மூலம் தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம்.