பஞ்சாப் முன்னாள் அமைச்சர் நவஜோத்சிங் சித்துவின் ராஜினாமாவை ஏற்பதாக அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் மாநில சுற்றுலா மற்றும் கலாச்சார விவகார துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் நவ்ஜோத் சிங் சித்து.


முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.  இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.  அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியில் இருந்தும் எதிர்ப்பு குரல் வலுத்தது.  எனினும் சித்து தனது தரப்பு நியாயத்தினை விளக்கினார். 


சித்துவின் இந்த செயலுக்கு, முன்னாள் ராணுவ அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்ட மாநில முதல்வர் அமரீந்தர் சிங்கும் கண்டனம் தெரிவித்தார். இதிலிருந்தே இருவருக்கும் இடையே அதிருப்தி ஏற்பட்டது.


தொடர்ந்து நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சித்துவின் மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதற்கு பின் முதல்வர் அமரீந்தர் சிங் தான் உள்ளார் என சித்து பகிரங்கமாக குற்றச்சாட்டு முன்வைத்தார். தொடர்ந்து உள்கட்சி பூசல் குறித்து கட்சி தலைமையிடம் எழுத்து பூர்வ புகார் கடிதம் அளித்தார் சித்து.


இத்தகு நடவடிக்கையால் சித்து விரைவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்படலாம் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பஞ்சாப் மாநில அமைச்சர் பதவி விலகல் கடித நகலை சித்து  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதில் கடந்த ஜூன் 10 என தேதியிடப்பட்ட எனது கடிதம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திஜிக்கு அனுப்பப்பட்டு உள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது.


அதனைதொடர்ந்து 15-ம் தேதி ட்விட்டர் செய்தியில், எனது பதவி விலகல் கடிதம் முதல்வருக்கு அனுப்பப்பட்டு விட்டது.  அவரது அலுவலக இல்லத்தில் அது சேர்ந்து விட்டது என தெரிவித்தார். இக்கடிதத்தின் மீது முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சித்துவின் ராஜினாமாவை ஏற்பதாக முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். சித்துவின் ராஜினாமாவை, ஆளுநர் விஜயேந்திர பால் சிங்கிற்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.