புல்வாமா தாக்குதலில் யார் அதிகம் பயனடைந்தார்கள்? ராகுல் காந்தி 3 கேள்வி
புல்வாமா தாக்குதலில் அதிகம் பயனடைந்தவர் யார்? அது தொடர்பான விசாரணை என்ன ஆனது? எனக் கேள்விகளை எழுப்பிய முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
புது டெல்லி: சரியாக ஒரு வருடம் முன்பு, பிப்ரவரி 14 ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் பணியாளர்கள் மீது பயங்கரவாத படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். புல்வாமா தாக்குதலின் முதல் ஆண்டு நினைவு நாளில் முழு தேசமும் துக்கத்தில் மூழ்கியுள்ளது. மறுபுறம், இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த மூன்று கேள்விகளையும் ராகுல் காந்தி ட்விட்டர் மூலம் கேட்டுள்ளார். அதில் இந்த தாக்குதலால் யார் அதிகம் பயனடைந்தார்கள் என்று ராகுல் கேட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் கருத்துக்கு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த கபில் மிஸ்ரா பதிலடி கொடுத்துள்ளார். இந்திரா - ராஜீவ் கொல்லப்பட்டதன் மூலம் யார் பயனடைவார்கள் என்று நாடு கேட்டால், நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள் என்று கபில் மிஸ்ரா பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுலின் அந்த மூன்று கேள்விகள் என்ன?
ராகுல் காந்தியின் மூன்று கேள்விகள் பாஜகவை குறிவைத்து கேட்டுள்ளார். முதலில் அவர், கடந்த ஆண்டு நடந்த பயங்கரமான புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்த தியாகிகளுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அவர்கள் அனைவரும் நம் தேசத்திற்கு சேவை செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து உள்ளனர். அவர்களின் தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது எனக் கூறியுள்ளார். இதனையடுத்து அவர் 3 கேள்விகளை கேட்டுள்ளார்.
1. இந்த தாக்குதலில் இருந்து அதிகம் பயனடைந்தவர் யார்?
2. தாக்குதல் தொடர்பான விசாரணையின் விளைவு என்ன?
3. தாக்குதல் நடத்த காரணமாக இருந்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பாஜக அரசாங்கத்தில் இதுவரை யார் பொறுப்பேற்கவில்லை? இவ்வாறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இந்திரா - ராஜீவ் படுகொலையால் பயனடைந்தவர் யார்?
ராகுல் காந்தியின் ட்வீட்டிற்குப் பிறகு, பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த கபில் மிஸ்ரா, காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுலுக்கு பதிலடி தந்துள்ளார். கபில் மிஸ்ராவின் கேள்வி, "'வெட்கக்கேடானது ராகுல் காந்தி. புல்வாமா தாக்குதலால் பயனடைந்தவர் யார் என்று நீங்கள் கேட்கிறீர்கள். இந்திரா-ராஜீவ் படுகொலையால் யார் பயனடைந்தார்கள் என்று நாடு கேட்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள். இத்தகைய மலிவான அரசியல் செய்ய வேண்டாம், வெட்கப்படுங்கள்" எனக் கூறியுள்ளார்.
தியாக வீரர்களுக்கு அஞ்சலி:
புல்வாமாவில் 2019 பிப்ரவரி 14 அன்று நடந்த தற்கொலைத் தாக்குதலில் இறந்த 40 சிஆர்பிஎஃப் பணியாளர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஸ்ரீநகரின் சிஆர்பிஎஃப் லெத்போராவில் உள்ள நினைவிடத்தில் தியாக வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்:
14 பிப்ரவரி 2019 அன்று மாலை 3 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. திடீரென்று, தொலைக்காட்சி சேனல்களில் ஒரு செய்தி வந்தது, அது நாட்டை நடுங்கச் செய்தது. இந்த செய்தி ஜம்மு-காஷ்மீரிலிருந்து வந்தது. புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப் - CRPF) வீரர்களைக் கொன்றார்.