சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது இராணுவம்; மோடி அல்ல: ராகுல் காந்தி தாக்கு
சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது மோடி அல்ல, இந்திய இராணுவம். இராணுவம் மோடியின் தனிப்பட்ட சொத்து அல்ல என ராகுல்காந்தி கடும் விமர்சனம்.
புதுடில்லி: சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது மோடி அல்ல, இந்திய இராணுவம். இராணுவம் மோடியின் தனிப்பட்ட சொத்து அல்ல என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான ஆட்சியின் போது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் தாக்குதலை வீடியோ கேம் எனக்கூறிய பிரதமர் மோடி, நமது இராணுவத்தை அவமதித்திருக்கிறார். நமது இராணுவ சாதனைகளை காங்கிரஸ் அரசியல் ஆக்குவதில்லை. இராணுவம் நாட்டிற்கு சொந்தமானது, ஒரு நபர் சொந்தமானது அல்ல.
பயங்கரவாதத்தை முற்றிலுமாக அளிக்க வேண்டும். மோடி அரசாங்கத்தை விட நாம் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை கையாள்வோம். காங்கிரஸ் எந்தவொரு பயங்கரவாதியையும் பாக்கிஸ்தானுக்கு அனுப்பியதில்லை. அப்படி ஒருபோதும் காங்கிரஸ் செய்யாது. காங்கிரஸ் அரசாங்கமும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. ஆனால் அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடவில்லை.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் எனக்கூறிய பாஜக, என்ன செய்துக்கொண்டு இருக்கிறது. வேலைவாய்ப்பு வழங்கியதா? இல்லை. ஆனால் நான் (ராகுல்காந்தி) உத்தரவாதம் தருகிறேன் ஒரு வருடத்தில் 22 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். காங்கிரசின் "நியாய் திட்டம்" நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கும்.
வேலையில்லா திண்டாட்டம் பற்றியோ, விவசாயிகள் பற்றியோ பிரதமர் மோடி எதுவும் பேசுவதே இல்லை. நாட்டின் காவலாளி திருடன் என்ற கோஷத்தை நான் எப்போதும் முன்னெடுத்து செல்வேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.