விலைவாசி விவகாரம்: மோடி அரசு மீது ராகுல் காட்டம்
விலைவாசி குறித்து பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது என்று மக்களவையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவையில் இன்று விலைவாசி குறித்த விவாதத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:- ஸ்டார்ட் அப் இந்தியா, மற்றும் மேக் இன் இந்தியா ஆகியவற்றில் நீங்கள் பொய்யான கூற்றுக்களை கூற முடியும். ஆனால் விலைவாசி உயர்வில் பொய் கூற முடியாது. அனைவருக்கும் அளித்த வாக்குறுதியை பிரதமர் மோடி மறந்துவிட்டார். தற்போது அந்த வாக்குறுதியை அவருக்கு நான் நினைவூட்டுகிறேன். நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. பாரதீய ஜனதாவும் பிரதமர் மோடியும் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது?
அண்மையில் மோடி அரசு இரண்டு ஆண்டு நிறைவு விழா கொண்டாடியது. இதில் விலைவாசி உயர்வை குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்திற்கும் பாரதீய ஜனதா ஆட்சி காலத்திற்கும் விலைவாசியில் பெரும் வித்தியாசம் காணப்படுகிறது. சமையல் எண்ணெய், பருப்பு, பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. ஏழை மக்கள் உணவு பொருட்கள் பெற முடியாமல் திண்டாடுகின்றனர். இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றட்டும்” இவ்வாறு அவர் கூறினார்.