ஜார்ஜ் பொன்னையாவை அடுத்து இந்து சாமியாரை சந்தித்த ராகுல்!
கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, மாதா அமிர்ந்தானந்தா மயி தேவியை நேற்று (செப். 16) சந்தித்துள்ளார்.
'பாரத் ஜோடோ யாத்ரா' (இந்தியாவின் ஒற்றுமைக்கான நடைபயணம்) என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். இதை முன்னிட்டு, கடந்த செப்.7ஆம் தேதி சென்னை வந்த ராகுல் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
பின்னர், ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற ராகுல் அன்று மாலையே தனது நடைபயணத்தை தொடங்கினார். முதல்நாள் நடைபயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டில் நான்கு நாள் பயணத்தை முடித்த ராகுல், சென்ற செப்.11ஆம் தேதி கேரளாவில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். இன்று தனது 10ஆவது நாள் நடைபயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இன்றைய பயணத்தை தொடங்குவதற்கு முன்னதாக, நேற்றிரவு மாதா அமிர்ந்தானந்தா மயி தேவியை ராகுல் காந்தி சந்தித்துள்ளார். கொல்லம் மாவட்டத்தின் கருணாநாகப்பள்ளி பகுதியில் உள்ள அவரின் ஆஸ்ரமத்தில் ராகுல் காந்தி இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.