புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள புதிய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்து வருகிறார். அப்போது ரயில்வே துறையில் தனியார் அமைப்புகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மோடி தலைமையிலான மத்திய அரசு பொது பட்ஜெட்டுடன் சேர்த்து ரயில்வே பட்ஜெட்டும் இணைத்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 


ரயில் கட்டணங்கள், ரயில் பயணிகளின் பாதுகாப்பு, ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. 


இந்தநிலையில், இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், ரயில்வே துறைகளில் உள்கட்டமைப்பை அதிகரிக்க மத்திய அரசு அதிகளவு முதலீடு செய்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2030 ஆம் ஆண்டு வரை ரயில்வே கட்டுமானத்துக்கு ரூ.50 லட்சம் கோடி தேவைப்படுகிறது. அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 


ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பு அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது தண்டவாளங்கள் அமைத்தல், பயணிகள் ரயில் இயக்கம் மற்றும் சில கட்டுமானங்கள் போன்றவை PPP எனப்படும் (Public-Private Partnership) மக்கள் தனியார் கூட்டு ஒத்துழைப்போடு நிறைவேற்றப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


2019-2020 ஆம் ஆண்டுக்கான முழு அளவிலான பட்ஜெட் இன்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்திரா காந்திக்கு அடுத்து, பட்ஜெட்டை தாக்கல் செய்யும் இரண்டாவது பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.