இனி ஏசி பெட்டிகளில் போர்வை கிடையாது?
சில ரயில்களில் ஏசி பெட்டிகளில் போர்வை வழங்குவதை நிறுத்த ரயில்வே முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சமீப காலத்தில் சி.ஏ.ஜி., தனது அறிக்கையில், ரயில்களில் சுத்தம் மற்றும் சுகாதாரம் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என ரயில்வேக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து குறிப்பிட்ட சில ரயில்களில் ஏசி பெட்டிகளில் போர்வைகள் வழங்கப்படுவதை நிறுத்தி வைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரி கூறுகையில், போர்வை வழங்க படாத ரயில்களில் சோதனை முயற்சியாக பயணிகள் குளிரில் நடுங்காமல் இருக்க வெப்பநிலை 19 டிகிரி செல்சியசிலிருந்து 24 டிகிரி செல்சியசாக அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது. மற்ற ரயில்களில் ஏசி பெட்டிளில் போர்வைகள் வழங்கப்படும். அதிக செலவு காரணமாக போர்வைகள் வழங்குவதை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது.
பயணிகளுக்கு போர்வை மற்றும் படுக்கை விரிப்பை சுத்தப்படுத்த ரூ.55 செலவாகிறது. ஆனால், பயணிகளிடம் ரூ.22 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரயில்வே விதிமுறைப்படி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அவற்றை சுத்தப்படுத்த வேண்டும். ஆனால், ஊழியர்கள் இதனை முறையாக பின்பற்றுவதில்லை.
இதனை தவிர்க்க கடந்த வருடம் ரயில்வே ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன்படி, டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணிகள், ஒரு முறைபயன்படுத்தக்கூடிய படுக்கை விரிப்பு மற்றும் போர்வையை ஐஆர்சிசிடி இணையதளம் மூலம் புக்கிங் செய்து, ரயில் நிலைய கவுண்டர்களில் பெற்று கொள்ளலாம்.