ரயில்களில் 3ம் வகுப்பு ஏசி பெட்டிகளை அதிகரிக்கிறது ரயில்வே
சமீபகாலமாக நீண்ட தூர ரயில்களில் 3ம் வகுப்பு ஏசி பெட்டிகளுக்கான தேவை பயணிகளிடம் அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டு கால நீண்ட தூர ரயில்கள் வாயிலான வருவாய் மற்றும் பயணிகள் தொடர்பான புள்ளிவிவரங்களும் இதனை உறுதி செய்கின்றன.
நீண்ட தூர ரயில்களில் 3ம் வகுப்பு ஏசி பெட்டிகளை அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியது: சமீபகாலமாக நீண்ட தூர ரயில்களில் 3ம் வகுப்பு ஏசி பெட்டிகளுக்கான தேவை பயணிகளிடம் அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டு கால நீண்ட தூர ரயில்கள் வாயிலான வருவாய் மற்றும் பயணிகள் தொடர்பான புள்ளிவிவரங்களும் இதனை உறுதி செய்கின்றன.
2016 ஏப்ரல் 1 முதல் 2017 மார்ச் 10 வரையிலான காலத்தில் நீண்ட தூர ரயில்களில் பயணம் செய்தவர்களில் 17 சதவீதம் பேர் 3ம் வகுப்பு ஏசி பெட்டிகளில் பயணம் செய்துள்ளனர். இதே காலத்தில் நீண்ட தூர ரயில்களின் மொத்த கட்டண வருவாயில் 3ம் வகுப்பு ஏசி பெட்டிகள் பங்கு மட்டுமே 32.60 சதவீதமாகும்.
கணக்கீடு காலத்தில் நீண்ட தூர ரயில்களில் 3ம் வகுப்பு ஏசி பெட்டிகளின் பயணிகள் பங்களிப்பு 16.69 சதவீதத்திலிருந்து 17.15 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோன்று 3ம் வகுப்பு ஏசி பெட்டிகள் வாயிலான வருவாயும் 32.60 சதவீதத்திலிருந்து 33.65 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதேவேளையில், படுக்கை வசதி (ஸ்லீப்பர்) பெட்டிகளில் பயணம் செய்தவர்களின் பங்களிப்பு 60 சதவீதத்திலிருந்து 59.78 சதவீதமாக சரிந்துள்ளது. வருவாய் அடிப்படையிலும் படுக்கை வசதி பெட்டிகளின் பங்களிப்பு 45.94 சதவீதத்திலிருந்து 44.78 சதவீதமாக குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.