கேரளா கனமழை! நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 53-யை எட்டியது!
கேரளாவில் பொழிந்துவரும் கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 53-ஆக உயர்ந்துள்ளது!
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பரவலாக மழை பொழிந்து வருகின்றது. கேரள மாநிலம் இடுக்கி, கோழிக்கோடு, கன்னூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. மழையின் கோரத்தாண்டவத்தால் ஏற்பட்ட சேத்ததில் இதுவரை கேரளாவில் மட்டும் 53-பேர் உயிர் இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மீட்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். கனமழையால், பெரிதும் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார். மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தை பொருத்தவரை கோவை மாவட்டம் வால்பாறையில் மண் சரிவு, மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளது. இதனால் நகரெங்கும் இருள் சூழ்ந்து காட்சியளிக்கின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி இடி மின்னல் சூறைக் காற்றுடன் பலத்தமழை பெய்து வருகிறது. இதனால் மரங்கள் வேருடன் சாய்ந்து சாலை போக்குவரத்தினை கடுமையாக தாக்கியுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.