டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனி நேற்று எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில நாட்களாகவே நுரையீரல் தொற்று காரணமாக மதன் லால் சைனி (வயது 75) அவதிப்பட்டு வந்தார். இதனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 7 மணியளவில் காலமானார்.


இவர் ராஜஸ்தான் மாநில பாஜக தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். இவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் மதன் லால் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.


இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஸ்ரீ மதன்லால் சைனி ஜி காலமானது பாஜக குடும்பத்திற்கு பெரும் இழப்பாகும். ராஜஸ்தானில் கட்சியை வலுப்படுத்த அவர் பெரும் பங்களித்தார். அவரது இணக்கமான தன்மை மற்றும் சமூக சேவை முயற்சிகளுக்கு அவர் பரவலாக மதிக்கப்பட்டார். எனது இரங்கல் மற்றும் ஆறுதலை அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.