ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ஆகிய ரயில்களின் டிக்கெட் கட்டணம் 10 முதல் 50 சதவீதம் இன்று முதல் உயர்வு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிவேக ரயில்களான சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ ஆகிய ரயில்களில் புதிய கட்டண முறையை ரயில்வே இன்று முதல் அறிமுகப்படுத்துகிறது.


இந்த புதிய கட்டண முறைப்படி மக்கள் 10 முதல் 50 சதவீதம் வரை கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ரயிலின் முதல் 10 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே தற்போது உள்ள கட்டணம் வசூலிக்கப்படும். 


பிறகு அடுத்த ஒவ்வொரு 10 சதவீத இருக்கைகளுக்குமான டிக்கெட்டுகளின் விலை 10 சதவீதம் அதிகரிக்கும். டிக்கெட் விலைகள் அதிகபட்சமாக 50 சதவீதம் வரை அதிகரிக்கும்.


ரயில்களின் மொத்தம் உள்ள டிக்கெட்டுகளில் 


முதல் 10 சதவீதம் டிக்கெட்டுகள் மட்டுமே அடிப்படை கட்டணத்திற்கு கிடைக்கும். 


11 முதல் 20 சதவீத டிக்கெட்டுகளின் விலை 1.1 மடங்கும், 


21 முதல் 30 சதவீத டிக்கெட்டுகளின் விலை 1.2 மடங்கும், 


31 முதல் 40 சதவீதம் டிக்கெட்டுகளின் விலை 1.3 மடங்கும், 


41 முதல் 50 சதவீதம் டிக்கெட்டுகளின் விலை 1.4 மடங்கும், 


51 முதல் 60 சதவீதம் டிக்கெட்டுகளின் விலை 1.5 மடங்கும்  என அதிகரிக்கும்.



புதிய கட்டண முறை சோதனை அடிப்படையில் ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில்களின் 2-ம் வகுப்பு ஏசி, 3ம் வகுப்பு ஏசி பெட்டிகளிலும், துரந்தோ ரயில்களின் ஸ்லீப்பர் வகுப்புகளிலும் அறிமுகம் செய்யப்படுகிறது. 


முதல் வகுப்பு ஏசி மற்றும் எக்சிகியூட்டிவ் வகுப்புகளுக்கான டிக்கெட் விலை ஏற்கனவே அதிகமாக இருப்பதால் அதன் கட்டணம் உயர்த்தப்படாது.


மூன்று மாதங்களுக்கு இந்த கட்டண உயர்வு சோதனை முறையில் அமல்படுத்தப்படுவதாகவும், மக்களின் வரவேற்பையும் எதிர்ப்பையும் பொறுத்து கட்டண உயர்வு நீட்டிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.


ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்தியாவில் மொத்தம் 42 ராஜ்தானி ரயில்கள், 46 சதாப்தி ரயில்கள் மற்றும் 54 துரந்தோ ரயில்கள் உள்ளன. கட்டண உயர்வு மூலம் ரூ.500 கோடி வருமானம் ஈட்ட திட்டமிட்டுள்ளது.