ராம் ரஹிம் வழக்கு: ரோதக்கில் பல அடுக்கு பாதுகாப்பு
குர்மித் ராம் ரஹிம் சிங்குக்கு இன்று தீர்ப்பு அறிவிக்கப்படுவதை ஒட்டி ஹரியானா மற்றும் சுற்றுபுற மானிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேரா சச்சா சவுதா என்ற சமூக நல - ஆன்மீக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம். பாலியல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராம் ரஹிம் குற்றவாளி என ஹரியானா நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சுனாரியா சிறை அமைந்துள்ள ரோதக் நகர் முழுவதும் பல்வேறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வன்முறை மற்றும் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ஹரியானாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதைப்போல பஞ்சாப்பில் மால்வா பிரதேசத்தில் அடங்கியுள்ள 13 மாவட்டங்களிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. மேலும், தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.