முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மறைவிற்கு பாமக நிறுவனர் ராமதாசு இரங்கல் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி உடல்நலக் குறைவால் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.


அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் மாணவர் சங்கத்தில் இணைந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அருண் ஜேட்லி, பின்னாளில் அதன் தேசியத் தலைவராக உயர்ந்தார். நெருக்கடி நிலை காலத்தில் கைது செய்யப்பட்ட அவர் 19 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ஊழல் எதிர்ப்பு அமைப்பின் முக்கியத் தலைவராக திகழ்ந்தார். நெருக்கடி நிலை காலத்திற்கு பிறகு ஜனசங்கத்திலும், அந்த அமைப்பு பின்னர் பாரதிய ஜனதாவாக மாற்றப்பட்ட போது அக்கட்சியிலும் இணைந்து பணியாற்றினார். வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி ஆகியோரின் நன்மதிப்பை பெற்றிருந்த அவர், வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி அமைச்சரவைகளில் பாதுகாப்பு, நிதி, சட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளின் அமைச்சராக சிறப்பாக பணியாற்றினார்.


இந்தியாவின் தலைசிறந்த சட்ட வல்லுனர்களில் ஒருவராகவும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின்  மூத்த நிர்வாகிகளில் ஒருவராகவும் செயல்பட்டார். சிறுநீரகக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக உறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொண்ட போதிலும் தொடர்ந்து உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உடல் நலம் தேறி வருவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் காலமானார் என்ற செய்தியை தாங்கிக் கொள்ள முடியவில்லை.


அருண்ஜேட்லியின் மறைவு பாரதிய ஜனதாவுக்கு பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்லையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்  கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.