மும்பை: 50 பைசா உள்ளிட்ட அனைத்து நாணயங்களும் பணபரிமாற்றின் போது வங்கிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. நாணயங்களை வாங்க மறுத்தால் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிசர்வ் வங்கி புதுப்புது ரூபாய் நாணயங்களை அந்தந்தக் காலகட்டத்திற்கு ஏற்ப வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நாட்டில் தற்போது 50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் மற்றும் ரூ.10 நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. ஆனால் ரூ.10 மற்றும் 50 பைசா உள்ளிட்ட சில நாணயங்கள் செல்லாது எனக்கூறி வாங்க மறுப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி பல புகார்கள் வந்துள்ளது.


இதனையடுத்து, இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், "ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப பொருளாதாரம் மற்றும் சமூகம், கலாச்சாரம் போன்றவற்றை மையமாக வைத்து நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. அந்த நாணயங்கள் நீண்டகாலம் புழக்கத்தில் இருக்கும். அதேநேரத்தில் புதிய உருவங்களிலும், புதிய வடிவங்களிலும் நாணயங்கள் வெளியிடப்படும். 


இதனால் சில நேரங்களில் நாணயங்கள் மீதான நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பப்படுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களும் சட்டப்படி செல்லும். அதனை யாரும் வாங்க மறுக்க வேண்டாம்.


அனைத்து வங்கிகளும் அனைத்து நாணயங்களை பண பரிவர்த்தனைவயின் போது பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்களை திருப்பி அனுப்பக் கூடாது. பொதுமக்கள் எவ்வித தயக்கமும் இன்றி, பணபரிவர்த்தனைக்கு சில்லறை நாணயங்களை பயன்படுத்தலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.