Election Results 2022 : குஜராத்தில் வெற்றி... ஹிமாச்சலில் தோல்வி - பாஜக தப்பித்த இடமும்... தவறிழைத்த இடமும்!
Gujarat HP Election Results 2022 : பாஜக குஜராத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற நிலையில், ஹிமாச்சல் பிரதேசத்தில் கையில் இருந்த ஆட்சியை காங்கிரஸிடம் இழந்துள்ளது. பாஜகவின் இந்த வெற்றி, தோல்வி குறித்து ஓர் அலசல்.
Gujarat HP Election Results 2022 : குஜராத், ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமின்றி, உத்தரப் பிரதேசம், பீகார் என சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பிறனர்களுக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது.
குஜராத்தை பொருத்தவரை, இத்தனை காண்டுகாலமாக பெற்றிராத வெற்றியை பாஜக பெற உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, 150க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. அந்த வகையில், பாஜக ஏழாவது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் பாஜக 99 இடங்களைதான் பெற்றது. ஆனால், இம்முறை அதை தாண்டும் என தெரிகிறது. 1995ஆம் ஆண்டு 149 தொகுதிகளை காங்கிரஸ் வென்றதே இப்போது அவரை குஜராத்தில் சாதனையாக உள்ள நிலையில், அதை பாஜக இந்த தேர்தலில் முறியடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்த வெற்றிக்கான முக்கிய காரணங்கள் என்ற கேள்வியும், இந்த வெற்றிச்செய்தியோடு இணைந்தே வருகிறது. குஜராத்தின் அடி வேர் வரை பாஜக ஊடுருவி இருந்தாலும், கடந்த தேர்தலில் பெற்ற 99 இடங்களைவிட அதிகரித்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
குஜராத் வெற்றிக்கான காரணம்
அதில் முக்கியமான ஒன்று, குஜராத்தில் பிரதமர் மோடிக்கு இருக்கும் செல்வாக்கு. 14 ஆண்டுகாலம் அங்கு முதலமைச்சராக இருந்தபோது பெற்ற செல்வாக்கு மரியாதையை தாண்டி பிரதமர் என்ற ரீதியிலும் அவர் தனி செல்வாக்கை பெற்றுள்ளார். அதனை ஓட்டாக அறுவடை செய்வதையும் பாஜகவினர் கச்சிதமாக கற்றுவைத்துள்ளனர். அவர் அகமதாபாத்தில் டிச. 1ஆம் தேதி மேற்கொண்டு மிகப்பெரும் ஊர்வலம், குஜராத்தில் பாஜகவின் வெற்றியில் முக்கிய இடமுண்டு.
இதையடுத்து, கரோனா காலத்தில் பாஜக அரசு மீது எழுந்த அதிருப்தியை, லாவகமாக துடைத்ததுதான். தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கையை குஜராத் அரசு குறைத்து சொல்வதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அப்போது முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானியை நீக்கிவிட்டு, பூபேந்திர படேலை அப்பதவியில் அமரவைத்தனர். இதுதான் தேர்தல் நேரத்தில், கரோனாவை பெரிய பிரச்னையாக மாற்றவில்லை.
காங்கிரஸின் செய்லபாடின்மை, முதன்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவு, ஆம் ஆத்மி - ஓவைசி கட்சியினர் ஆகியோர் இஸ்லாமியர்களின் வாக்குகளை பிரித்தது போன்றவையும் பாஜக வெற்றிக்கு உதவியவை.
ஹிமாச்சலில் மோடியின் ஃபார்முலா தோற்றது ஏன்?
பொதுவாக, ஹிமாச்சல் பிரதேசத்தில் 1985ஆம் ஆண்டுக்கு பின், காங்கிரஸ், பாஜக ஆகியவை அடுத்தடுத்து ஆட்சியை பிடிப்பார்கள். ஆட்சியில் இருக்கும் கட்சியால் இரண்டாவது முறையை ஆட்சியை கைப்பற்ற முடியாது. அதைப்போலவே, இம்முறை ஆட்சியில் இருக்கும் பாஜகவும் ஹிமாச்சலில் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த வழக்கத்தை இந்த தேர்தலோடு அழித்தொழிப்போம் என பிரதமர் மோடியே முழங்கிய நிலையிலும், ஹிமாச்சல் மக்கள் காங்கிரஸை நாடியுள்ளனர். ஆறு முறை முதலமைச்சராக இருந்த வீர்பந்தர சிங் மறைவுக்கு பின், காங்கிரஸ் கட்சியில் நிலவும் தலைமை பிரச்னையை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது காங்கிரஸ் உள்ளது. குஜராத்தில் மக்கள் காங்கிரஸை கைவிட்டாலும், தங்களின் மாநிலத்தை உருவாக்கிய இந்திரா காந்தியை நினைவுக்கூரும் வகையில் ஹிமாச்சல் காங்கிரஸ் கட்சியை நம்பி வாக்களித்திருக்கிறது என்றே கூறப்படுகிறது.
தொடர்ந்து, மாநிலத்தின் 5 சதவீத வாக்கை வைத்துள்ள அரசு ஊழியர்களும் பாஜக தோல்விக்கு காரணம். ஏனென்றால், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்டவை மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருவோம் என அளித்த வாக்குறுதிதான். ஆம் ஆத்மி, குஜராத் தேர்தலில் கவனம் செலுத்த ஹிமாச்சலில் முழுமையாக பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.
தொடர்ந்து, பாஜகவின் உள்ளேயே எழுந்த கலகக்குரல்கள் எழுந்தன. சுமார் 11 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க மறுத்ததை அடுத்து, அவர்கள் ஒட்டுமொத்தமாக பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஜிஎஸ்டி அதிகரிப்பால் ஆப்பிள் வளர்ப்பவர்களிடம் எழுந்த அதிருப்தி, அக்னிபாத் திட்டம், வேலைவாய்ப்பின்மை, அத்தியாவிசைய பொருள்களின் விலை உயர்வு ஆகியவையும் பாஜக தோல்விக்கு முக்கிய காரணங்களாகும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ