LIVE | Gujarat Assembly Election Result 2022: குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. 182 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் 37 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. பாரதிய ஜனதா (BJP) ஆளும் குஜராத் மாநிலத்தில் 33 மாவட்டங்களில் உள்ள 182 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. குஜராத்தில் இந்த ஆண்டு தேர்தலில் 66.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன, இது 2017 சட்டமன்றத் தேர்தலில் பதிவான 71.28 சதவீதம் என்ற அளவை விட குறைவு. முதல்கட்ட தேர்தலில் 60.20 சதவீத வாக்குகளும், 2-வது கட்டத்தில் 64.39 சதவீத வாக்குகளும் பதிவாகின.
குஜராத்தில் பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. வழக்கமாக இரு முனைப் போட்டியாக இருக்கும் குஜராத் தேர்தலில், இம்முறை ஆம் ஆத்மி கட்சிக்கும் வாய்ப்புகள் அதிகமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.எனவே, பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி என மாநிலத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இருப்பினும், கருத்துக்கணிப்புகளின்படி, குஜராத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற்று ஏழாவது முறையாக ஆட்சி அமைத்து சாதனை படைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, 2017 ஐ விட பாஜக அதிக இடங்களைப் பெறும் என்றும் கணிப்புகள் சொல்கின்றன.
ஜீ நியூஸ் நடத்திய ஆய்வில், குஜராத்தில் பாஜக 110 முதல் 125 இடங்களை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. 2017 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் 45 முதல் 60 இடங்களைக் கைப்பற்றும் என்றும், 2017ல் காங்கிரஸ் 77 இடங்களில் வெற்றி பெற்றது.
குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 1 முதல் 5 இடங்களை கைப்பற்றும் என எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டை விட ஆம் ஆத்மி கட்சிக்கு இது பெரிய விஷயம், ஏனெனில் 2017 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 29 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தது. 2017 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி 0.10 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றது.
இந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. குஜராத் தேர்தல் செய்திகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு இந்த நேரலைப் பதிவில் இணைந்திருங்கள்...